தமிழ் இன எழுச்சியின் அடையாளத்தை அழிக்கும் செயலை முறியடிக்க வேண்டும்- மயூரன்
In இலங்கை January 9, 2021 5:38 am GMT 0 Comments 1520 by : Yuganthini

தமிழ் இன எழுச்சியின் அடையாளமாக திகழும் நினைவு முற்றத்தை அழிக்க எத்தனிக்கும் எதிரிகளின் செயல்களை முறியடிப்பது, தமிழர்களின் கடமையாகுமென முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட நினைவிடம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு உடைக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள கண்டண அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நினைவு முற்றத்தை இடித்து, பேரினவாதம் ஒரு குரூரமான வெறிச்செயலை அரங்கேற்றியுள்ளது.
போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக கட்டப்பட்ட நினைவாலயத்தை அழித்து இலங்கையானது இரக்கமற்ற அரக்கர்களின் கூடாரம் என்பதை உலகிற்கு மீண்டுமொருமுறை வெளிப்படுத்தியுள்ளது. அன்று இரத்தமும் சதையுமாக இருந்த எமது மக்களை கொன்றீர்கள் இன்று அவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள கற்களை அழிக்கிறீர்கள். இந்த செயற்பாடு எப்போது நிறுத்தப்பட போகின்றது.
இறுதிபோரில் முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டமை உலகம் அறிந்த உண்மை. உலக வரலாற்றில் முள்ளிவாய்க்கால் என்பது இன அழிப்புப் போரின் நீங்காத அடையாளமாக என்றும் நிலைத்து நிற்கும் என்பதில் மாற்றுகருத்தில்லை.
ஆணையிறவில் இராணுவத்திற்கு நினைவுசிலை வைக்கலாம், கிளிநொச்சியில் போர் நினைவுச்சின்னம் வைக்கலாம், போர் வெற்றிவிழாவை நீங்கள் கொண்டாடலாம், இழந்த உறவுகளை நினைந்துருகுவதற்கு தமிழர்களிற்கு இடமில்லை. இது தான் உங்களின் பௌத்த தர்மம். இதற்காகதான் தமிழர்கள் தனிநாடு கேட்டுபோராடினார்கள். மீண்டும் அந்த நிலையை ஏற்ப்படுத்துவதற்காகவா தமிழர்களை தூண்டுகிறீர்கள்.
கொரோனா வைரஸ் தீவிரமாகியுள்ள நிலையில் நாடு பொருளாதாரத்தில் சிக்கி தவிக்கிறது. தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் உணவின்றி பட்டினியை சந்திக்கின்ற அவசர காலத்தில் தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையையும் அவர்களது அடையாளங்களையும் நசுக்குகின்ற செயற்பாட்டை இரகசியமான முறையில் அரசு இரவோடிரவாக முன்னெடுத்துள்ளது.
உங்களால் சிலைகளை மாத்திரமே உடைக்க முடியும் வீறு கொண்டெழும் தமிழர்களின்மனங்களை உடைக்க முடியாது. படுகொலைகளும் அவலங்களும் எத்தனை தலைமுறைகள் தாண்டியும் மக்கள் மனங்களில் நினைவழியா தடமாக இருக்கத்தான் போகின்றது.
தமிழ் இன எழுச்சியின் ஓர்மையின் அடையாளமாக திகழும் நினைவு முற்றத்தை அழிக்க எத்தனிக்கும் எதிரிகளின் செயல்களை முறியடிப்பது மானத்தமிழர்கள் ஒவ்வொருவரதும் கடமையாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.