தமிழ் ஊடகவியலாளர்களின் கொலை குறித்து விசாரணைகள் இல்லை: சுமந்திரன் காட்டம்

யாழில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் இதுவரை விசாரணைகள் நடத்தப்படாமை குறித்து, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஊடக சுதந்திரமும் சமூக பொறுப்பும் பற்றிய கொழும்பு பிரகடனத்தின் 20ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் நேற்று (வியாழக்கிழமை) உரையாற்றுகையிலேயே கூட்டமைப்பின் பேச்சாளர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கடந்த காலங்களில் இடம்பெற்ற லசந்த விக்ரமதுங்க, கீத் நொயார், பிரகீத் எக்னெலிகொட ஆகியோர் மீதான தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
யாழில் 14 தமிழ் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் அக்கொலைகள் தொடர்பில் இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.
அதுமாத்திரமின்றி, யாழில் ஒரு ஊடகம் 33 தடவைகள் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டது. இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டதாக இல்லை.
சில ஊடகங்கள் பொய்யான செய்திகளை வெளியிட்டு பொறுப்பற்ற வகையில் செயற்படுகின்ற போதிலும், நாட்டில் ஊடக சுதந்திரத்தினை வினைத்திறனாக கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.