தமிழ் மக்களுக்கு நடந்த அநீயாயங்களை மூடிமறைக்கும் தரப்பினருடன் இணையமாட்டோம்- சுரேஸ்
In இலங்கை January 5, 2021 10:33 am GMT 0 Comments 1519 by : Yuganthini
தமிழ் மக்களுக்கு நடந்த அநீயாயங்களை மூடிமறைக்கும் வகையில் செயற்படும் தரப்பினருடன் ஒருபோதும் இணையமாட்டோமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முன்னாள் தலைவர் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 21ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தர்மலிங்கம் சுரேஸ் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ் மக்கள் மீது முன்னெடுக்கப்பட்டுள்ள இன அழிப்பு விவகாரங்கள் அனைத்தும், ஒரு காலகட்டத்தில் சர்வதேச சமூகத்தினால் விசாரணை செய்யப்படும். அதன்மூலம் சர்வதேச சமூகம் எங்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும். அதற்கான சந்தர்ப்பம் வரும். அதற்காக நாங்கள் காத்திருக்கின்றோம்.
தமிழ் மக்களின் போராட்டத்தினை கொச்சைப்படுத்தும் தரப்புகளையோ தமிழ் மக்களின் போராட்டம் வீணாண போராட்டம் என்று கூறுபவர்களை தமிழ் மக்கள் ஆதரிக்ககூடாது.
நாங்கள் சுமார் 50ஆயிரம் மாவீரர்களையும் ஒரு இலட்சத்து 80ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களையும் யுத்தத்தில் இழந்திருக்கின்றோம். இதற்கான சரியான பரிகாரத்தினைப் பெறவேண்டுமானால் தமிழ் மக்களுக்கு சரியான தலைமைத்துவம் தேவை.
கடந்த காலத்தில் அது நடைபெறவில்லை. முள்ளிவாய்க்காலில் போராட்டம் மெளனிக்கப்பட்டு 10வருடங்களை கடந்துள்ள நிலையில் எந்தவிதமான ஆக்கபூர்வமான செயற்பாடுகளும் தமிழ் தலைமைத்துவத்தினால் முன்னெடுக்கப்படவில்லை.
தமிழ் மக்கள் வாக்களித்து தெரிவுசெய்த தமிழ் அரசியல் தலைவர்கள் கடந்த காலத்திலும் தற்போதைய காலத்திலும் உள்ள அரசாங்கங்களை பாதுகாத்து சர்வதேச விசாரணைகளில் இருந்து தப்பவைத்துள்ளார்களே தவிர பூகோள அரசியல் நிலைமைக்கு ஏற்ப தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை.
மாறாக இந்த அரசாங்கத்தினையும் போரில் குற்றமிழைத்தவர்களையும் சர்வதேச விசாரணைகள் ஊடாக விசாரிக்கப்படவேண்டியவர்களையும் பாதுகாத்துள்ளார்களே தவிர இதுவரையில் எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கையினையும் எடுக்கவில்லை.
இன்றுள்ள அரசியல் தலைமைகளில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இன்று தமிழ் மக்களின் அரசியல் இருப்பினையும் தமிழ் மக்களுக்கு நடந்த அநியாயங்களையும் இனப்படுகொலை விவகாரங்களையும் வெளிப்படையாக சர்வதேசமும் தென்னிலங்கை மக்களும் அறியும் வகையில் தனது கருத்துகளை பதிவு செய்து வருகின்றார்.
ஜெனிவா விவகாரத்தில் கூட தமிழ் மக்களின் குரல் ஒன்றாக ஒலிக்கவேண்டும் என்பதற்காக அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு முடிவினை எடுத்துள்ளார்கள். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிவர்த்தி செய்யும் முகமாக எந்த தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுடனும் ஒன்றிணைந்து செல்வதற்கு தயாராகயிருக்கின்றோம்.
மாறாக இந்த அரசாங்கத்தினை பாதுகாக்கும் வகையிலும் தமிழ் மக்களுக்கு நடந்த அநீயாயங்களை மூடிமறைக்கும் வகையிலும் நகர்வுகளை மேற்கொண்டால் அவ்வாறானவர்களுடன் என்றைக்கும் கூட்டிணைந்து செயற்படமாட்டோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.