News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • கிழக்கு லண்டனில் கொடிய விபத்து: இருவர் உயிரிழப்பு
  • தாக்குதலுக்கு மத்தியில் நைஜீரியாவில் ஜனாதிபதி தேர்தல்
  • யாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்!
  • ட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்
  • காணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் – மன்னார் மக்களுக்கு அழைப்பு

தமிழ் மக்கள் தென் இலங்கையின் ஆட்சியாளர்களிடையே பகைமையையும், முரண்பாட்டையும் பாராட்டக்கூடாது

December 23, 2018 5:41 am GMT    

தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்பிரச்சனைக்கு புதிய அரசியலமைப்பின் ஊடாகத் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகளை தமிழ் மக்கள் இழந்துவிட்டார்கள்.

கடந்த இரண்டு மாதங்களாக இலங்கையின் அரசியல் சூழலில் நடைபெற்ற அதிகாரப் போட்டியில் தென் இலங்கை அரசியல் தலைமைகள் தமக்கிடையேயான அதிகார இழுபறியை ஒரு முடிவுக்கு கொண்டுவரும்வரை தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் நடுநிலையாக இருந்திருக்க வேண்டும்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை மத்தியில் மைத்திரியோ, மகிந்தவோ, ரணிலோ என்றில்லை. அவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தென் இலங்கை பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளையும், தமது கட்சி நலனையுமே முன்னிறுத்தி காய்களை நகர்த்துவார்கள்.

அந்தவகையில் அவர்களில் ஒருவருடன் இணக்கமாகவும், மற்றவருடன் பகையாகவும் தமிழ் மக்கள் இருந்துவிட முடியாது. துரதிஷ்டவசமாக தமிழ் மக்களின் தற்போதைய நிலைமையானது, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவானதாகவும், மைத்திரி, மகிந்த கூடாரத்திற்கு எதிரானதாகவும் வெளிக்காட்டப்பட்டுள்ளது.

அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்குத் தீர்வுக்கு ஒத்துழைக்குமாறு அல்லது தீர்வொன்றை வழங்குமாறு அவர்களைக் கேட்பதற்கான கதவுகள் மூடப்பட்டுள்ளதாகவே அவர்கள் கருதுகின்றார்கள். என்னவாக இருந்தாலும் அதை ஐக்கிய தேசியக் கட்சியோடு பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறுகின்ற அளவுக்கான பகையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கியுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறுவதைப்போன்று ‘ஒருமித்த நாடு’ என்ற சொற்பதத்தை தவிர்த்து அல்லது அந்த சர்ச்சையை கடந்து ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வொன்றை வழங்குவதாக சிங்கள மக்களுக்கு தெளிவாகக் கூறிவருகின்றார்.

இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் அதாவது நாட்டைப் பிளவுபடுத்த பயங்கரவாத யுத்தத்தை நடத்திய புலிகளின் பிணாமிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடனேயே ரணில் விக்கரமசிங்க ஆட்சி நடத்துகின்றார் என்ற பிரசாரத்தை இனவாதத் தொனியோடு மகிந்த அணியினர் முன்னெடுக்கத் தொடங்கியுள்ளதால், அந்த குற்றச்சாட்டானது சிங்கள மக்களிடையே தமக்கான ஆதரவை இழக்கச் செய்துவிடும் என்ற பயத்தின் காரணமாக ஆட்சியை முன்கொண்டு செல்வதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு தேவைப்படாத சூழல் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்களும் விசுவாசிகளும் சிந்திக்கின்றனர்.

ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதுபோல், நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்காமலே தமக்கு அறுதிப்பெரும்பான்மை கிடைப்பதை உறுதிப்படுத்தவும், பொது எதிரணியை பலவீனப்படுத்தவும் ஏதுவாக சுதந்திரக்கட்சியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்தரப்பிலிருந்து ஆளும் தரப்பிற்கு வருவதை விரும்புகின்றார்கள் அல்லது ஊக்குவிக்கின்றார்கள்.

ஜனவரி மாதம் 18ஆம் திகதி ஏற்கனவே விசாரணையில் இருக்கும் மகிந்த மற்றும் அவர் தலைமையிலமைந்த அமைச்சரவையினர் செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை தொடர்பான வழக்கு முடிந்ததும், சுதந்திரக் கட்சியிலிருந்து மேலும் பலரை உள்வாங்கி அவர்களுக்கு அமைச்சுக்களும் வழங்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு தேவையற்ற சூழலை ஏற்படுத்த முடியும் என்று ஐக்கிய தேசியக் கட்சியினர் ஆராந்துவருகின்றனர்.

மேலதிகமாக அமைச்சுக்களை வழங்குவதற்கு தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் தற்போது நடைபெற்றுவருகின்றது. தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான சூழல் சாத்தியப்படும் வேளையில் அமைச்சுக்களை அதிகரித்தவும், சுதந்திரக் கட்சியிலிருந்து வருபவர்களுக்கும் அமைச்சுக்களை வழங்கவும் முடியும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி நம்புகின்றது.

சுதந்திரக் கட்சியிலிருந்து கட்சி தாவும் எவருக்கும் அமைச்சுப் பொறுப்புக்களை வழங்pகப்போவதில்லை என்று இன்று ஜனாதிபதி மைத்திரிபால என்னதான் பிடிவாதமாகக் கூறினாலும், நிலைமைகள் மாறும்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார் என்பதும், மைத்திரிபால கூறுவதை அவரே உறுதியாக கடைப்பிடிக்க மாட்டார் என்பதும் உலகறிந்த விடயமாகும்.

225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பம் இட்டு கேட்டாலும் ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டடேன் என்றும், ரணிலை பிரதமராக நியமித்தால் அடுத்த ஒரு மணிநேரத்திற்குள் தான் பதவி விலகுவேன் என்று கூறிய மைத்திரிபாலதான். பின்னர் ரணிலுக்கு பதவி கொடுத்தார் என்பதையும், இப்போதும் அவர் ஜனாதிபதியாகவே இருக்கின்றார் என்பதையும் நாம் மறக்கமுடியாது.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்ளவேண்டிய ஒரு தருணத்தில் மட்டுமே ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியாளர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு தேவைப்படும். தற்போதைய நிலையில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவையான சந்தர்ப்பம் எதுவாக இருக்கும் என்றால், அது புதிய அரசியலமைப்பு ஒன்றை நிறைவேற்றுவதாகவோ அல்லது ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையாகவோ தான் இருக்கமுடியும்.

இந்த இரண்டு சந்தர்ப்பத்திலும், ஆட்சியாளர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்தாலும் தற்போதைய நிலையில் 122 ஐத் தாண்டாது என்ற நிலையில், 152 வாக்குகளைப் பெறுவதென்பது சாத்தியமாகாது. எனவே மூன்றிலிரண்டு வாக்குகளைப் பெற்று புதிய அரசியலமைப்பை நிறைவேற்றி தமிழர்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பது சாத்தியமான ஒன்றாகத் தெரியவில்லை.

மகிந்தவா? ரணிலா? என்ற அரசியல் போட்டியில் தமிழ் மக்கள் பக்கம் சாராமல் தனித்துவமாக இருந்து கொண்டு, யார்? ஆட்சியில் வருகின்றீர்களோ அவர்களோ நாங்கள் எங்கள் பிரச்சனைகள் தொடர்பாக பேசுவோம் என்று தமிழத் தரப்பு இருந்திருக்க வேண்டும்.
இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானமானது, தமிழ் மக்களை பக்கச்சார்பான தரப்பாக வெளிக்காட்டிவிட்டுள்ளது.

இந்த அரசியல் தீர்மானத்தின் விலையை தமிழ் மக்கள் நிச்சயம் ஒருநாள் கொடுக்கவேண்டியிருக்கும், அப்போது தற்போதைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த முடிவுகளை தனியே நடாளுமன்ற உறுப்பினர்களாக சம்மந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரின் தனிப்பட்ட தவறாக மட்டும் கடந்து செல்லமுடியாது.

சக தமிழ் போராட்ட அமைப்புக்களை ஒடுக்கியும், தடைசெய்தும் விடுதலைப்புலிகள் அமைப்பு ஏகபோக தலைமை எனும் இடத்தை வகித்து, இறுதியில் முள்ளிவாய்க்காலில் பின்னடைவு கண்டதைப்போன்று, தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே ஒட்டு மொத்த தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக வர்ணிக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகளும் தூரநோக்கம் கொண்டதாக அமைய வேண்டும் இல்லாவிட்டால் ரணிலுக்கு ஆதரவாக தமிழ் மக்கள் நிற்கின்றார்கள் என்று காட்டப்பட்ட முடிவானது தமிழ் மக்களைப் பொறுத்தவரை அதுவொரு அரசியல் முள்ளிவாய்க்காலாகவே அமைந்துவிடும்.

இப்போது இவ்வாறு கூறுவதை வேடிக்கையாக விமர்த்து கடந்துவிடமுடியும். ஆனால் எதிர்வரும் அரசியல் நகர்வுகளும், தேர்தல்களில் ஏற்படக்கூடிய மாற்றங்களும் இந்த விமர்சனத்தை நிதர்சனமாக்கும் என்றே கருத இடமுண்டு.

தமிழ் மக்கள் கொண்டிருக்கவேண்டிய அரசியல் சாணக்கியமானது, அரசியல் வெற்றிகளையும், அணுகூலங்களையும், பேரம் பேசும் வலிமையையும் கொண்டிருப்பதாக இருப்பது அவசியமாகும்.

அவ்வாறு இல்லாவிட்டால், நம்பிய ரணில் விக்கரமசிங்கவும் எம்மை ஏமாற்றிவிட்டார் என்று அரசியல் வாதிகள் தலையில் கையை வைத்துக் கொண்டு ஒதுங்கிவிட்டாலும், தமிழ் மக்கள் அந்த பின்னடைவுகளிலிருந்து வெளியேறி மீண்டும் தமது தேவையையும், அரசியல் வலிமையையும் தென் இலங்கை ஆட்சியாளர்களிடையே முன்னிறுத்தி வைப்பதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.


  • ws_img
    பிரதமரை வடக்கிற்கு அழைத்து நடந்தவையும், நடந்திருக்க வேண்டியவையும்

    அண்மையில் மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு பிரதமர்...

    Benitlas
  • ws_img
    மாகாணசபைக்கு விரைவாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்

    கிழக்கு மாகாணத்தில் புதிய ஆளுனராக ஹிஸ்புல்லா நியமி...

    Benitlas

வீச்சு  


பிரதமரை வடக்கிற்கு அழைத்து நடந்தவையும், நடந்த...


மாகாணசபைக்கு விரைவாகத் தேர்தல் நடத்தப்பட வேண்...


தேசிய அரசும் அதற்கான சட்ட வலிமையும்...


எந்தத் தேர்தல் முதலில் நடக்கும் விடைதெரியாத க...


புத்தளத்தில் ஆபத்தான வெடிபொருட்கள் கொலையாளிகள...


ரணில் சிங்கள மக்களுக்கு உண்மையைக் கூறுகின்றார...

  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.