தற்கொலைதாரியின் தாயார் உள்ளிட்ட ஐவர் அதிரடியாக கைது!

மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக இதுவரையில் ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 21ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல் குறித்து புலனாய்வுத்துறை, பொலிஸார் விசேட தேடுதல் மற்றும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனடிப்படையில் பெறப்பட்ட சீ.சி.ரி காணொளியின் அடிப்படையில் தற்கொலைதாரியாக புதிய காத்தான்குடி, நான்காம் குறுக்கினை சேர்ந்த றில்வான் எனப்படும் முகம்மது நசார் என்பரே தாக்குதலை நடாத்தியதாக இனங்காணப்பட்டுள்ளார்.
குறித்த நபரினை தாக்குதல்தாரியின் தாயார் அடையாளம் காட்டிய நிலையில் குறித்த தற்கொலை தாரியின் தாயார் உட்பட ஐந்து பேரை காத்தான்குடி பொலிஸார் கைதுசெய்துள்ளதாகவும் அவர்கள் குற்றப்புலனாய்வுத்துறையினரால் விசாரணைகளுக்குட்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மட்டக்களப்பு நகரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு நகர் மற்றும் மாவட்டங்களுக்குள் நுழையும் வாகனங்கள் தீவிர சோதனைகளுக்குட்படுத்தப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு தாழங்குடா, பிள்ளையாரடி, ஊறணிச்சந்தி ஆகியவற்றில் வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டு தீவிர சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு நகரிலும் வாகனங்கள் சந்தேகத்திற்கிடமான இடங்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் இயல்பு நிலை முற்றாக திரும்பியுள்ள நிலையில் மட்டக்களப்பு நகருக்கும் அதிகளவான மக்கள் வந்துசெல்வதன் காரணமாக பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதை காணமுடிவதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.