தாக்குதல்களின் எதிரொலி – களையிழந்து காணப்படும் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம்!
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் தொடர்ந்தும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டார்.
கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றுகூடி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தற்கொலை குண்டுதாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 250இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.
இந்த தாக்குதல்கள் கிறிஸ்தவ தேவாலயங்களில் மட்டுமல்லாது நட்சத்திர விடுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது இலங்கை மக்கள் மட்டுமல்லாது வெளிநாட்டவவர்களும் உயிரிழந்திருந்தனர்.
இதனையடுத்து தொடர்ந்தம் இலங்கை மீது தாக்குதல்கள் நடத்தப்படலாமென எச்சரிக்கைவிடுக்கப்பட்டதுடன், அவ்வாறான சம்பவங்களே தினமும் அரங்கேறியவண்ணமுள்ளன.
இந்தநிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் நடைபெற்று இன்றுடன் ஒரு வாரம் கடந்துள்ள நிலையிலும், அந்த கொடூர சம்பவம் பலர் மனங்களிலும் ஆறாத ரணங்களை ஏற்படுத்தியுள்ளது.
அதன் வடுக்கள் மக்களின் மனங்களிலிருந்து மறையாத நிலையில், தாக்குதலில் சேதமடைந்த கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்றைய ஞாயிறு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவில்லை என்பதனை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கின்றது.
கொழும்பு வாழ் கத்தோலிக்கர்கள் மாத்திரமன்றி வேற்று மதத்தினரும் அதிகம் வருகை தரும் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் இன்று களையிழந்து காணப்படுகின்றது.
குறித்த பகுதியில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டார்.
அத்துடன், கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், கொழும்பு பேராயரின் இல்லத்தில் இன்றைய தினம் காலை மும்மொழிகளிலும் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.