தாக்குதல்களை பயன்படுத்தி இலங்கையை கைப்பற்ற அமெரிக்கா முயற்சி – விமல் வீரவன்ஸ
In இலங்கை May 2, 2019 10:34 am GMT 0 Comments 2027 by : Dhackshala
இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையைப் பயன்படுத்தி, நாட்டுக்குள் நுழையவே அமெரிக்கா முயற்சித்து வருவதாக மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.
மேலும், அமெரிக்காவின் இந்த முயற்சிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒத்துழைக்கிறார் என்றும் இதனை அனைவரும் ஒன்றிணைந்து தோற்கடிக்காவிட்டால், இலங்கை அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாறிவிடும் என்றும் அவர் எச்சரித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியியிட்ட அவர், “கடந்த நான்கரை வருடங்களாக இராணுவ புலனாய்வு பிரிவு மற்றும் கடற்படையின் புலனாய்வு பிரிவை பலவீனப்படுத்தும் செயற்பாட்டையே அரசாங்கம் மேற்கொண்டது. இதனாலேயே நாட்டில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்படவுள்ள விளைவுகள் மிகவும் பாரதூரமானவையாகும்.
தற்கொலைக் குண்டுத்தாரி, இறந்தவுடன் சுவர்க்கத்துக்கு செல்வதாக நம்பிக்கொண்டிருக்கிறார். அவர் சுவர்க்கத்துக்கு சென்றவுடன் அமெரிக்கா உள்நாட்டுக்குள் நுழைந்துவிடும். இந்த பயங்கரவாதத்தை பயன்படுத்தி, ஐக்கிய அமெரிக்கா எமது நாட்டிலும் உள்நுழையவும் முயற்சிகளை மேற்கொள்கிறது.
இலங்கையில் தற்போதிருக்கும் அமெரிக்கத் தூதுவர், இதற்கு முன்னர் சிரியா, யேமன், ஆப்கானிஸ்தானில் இருந்துள்ளார். அதாவது, பயங்கரவாதச் செயற்பாடுகள் அதிகமாக இருக்கும் நாடுகளில் இவர் தூதுவராக இருந்துள்ளார்.
இதுதான் பிரதமரின் திட்டமாகும். இதனால்தான் புலனாய்வுப் பிரிவு பலவீனப்படுத்தப்பட்டது. பயங்கரவாதத்தை ஒழிக்க சர்வதேசத்தின் ஒத்துழைப்பு இருப்பதாக பிரதமர் கூறிவருகிறார்.
சர்வதேசம் எம்மீதுள்ள அக்கரைக்காக இலங்கைக்கு ஆதரவு தர முன்வரவில்லை. மாறாக, இலங்கையை கைப்பற்றுவதே அவர்களின் திட்டமாகும். இவ்வாறானவர்களின் திட்டத்தினால் இன்று அப்பாவி மக்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலைமை நீடித்தால் அமெரிக்காவின் புலனாய்வுப் பிரிவினர் மட்டுமன்றி, அவர்களின் இராணுவத்தினர்கூட நாட்டுக்குள் வரக்கூடும்.
உண்மையில், இலங்கையை ஒரு சிரியாவாகவும், லிபியாவாகவும் மாற்றத்தான் இந்த அரசாங்கம் முயற்சிக்கிறது.
இந்த முயற்சியை நாம் ஒன்றிணைந்து தோற்கடிக்கச்செய்ய வேண்டும். இந்த போராட்டத்தில் நாம் தோல்வியடைந்தால் இறுதியில் இந்த நாடு அமெரிக்காவுக்கு சொந்தமாகிவிடும்” என மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.