குண்டுத் தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதி ஏற்கனவே அறிந்திருந்தார் – சுமந்திரன் குற்றச்சாட்டு!
In ஆசிரியர் தெரிவு May 2, 2019 10:04 am GMT 0 Comments 2618 by : Dhackshala
உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதல்கள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே அறிந்திருந்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த விடயம் குறித்து எவ்வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளாது ஜனாதிபதி சுற்றுலா சென்றமை வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயமென்றும் அவர் சாடியுள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள அவரது வீட்டில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “தாக்குதல்கள் குறித்து ஏற்கனவே பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் வழங்கப்பட்ட போதிலும் அது குறித்து எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமையினால் இந்த கோர சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் தற்போது கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் ஆகியோர் இந்த இந்த முன்னெச்சரிக்கையை ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளார்கள் எனும் நிலைப்பாட்டை வெகு விரைவில் பகிரங்கமாக அறிவிப்பார்களென நான் நம்புகின்றேன்.
இந்த விடயங்கள் குறித்து ஜனாதிபதிக்கு தெரிந்திருந்தும் அதுகுறித்து நடவடிக்கையினை மேற்கொள்ளாது அவர் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர் வெளிநாட்டில் இருந்தபோதும் இந்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவை எதையும் பொருட்படுத்தாது ஜனாதிபதி செயற்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய ஒரு விடயம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விடுதலைப் புலிகள் மீளுருவாக்கம் பெறுகின்றார்கள் என்ற மாயை தோற்றத்தை உருவாக்கி அதனுாடாக தமக்கு நெருக்கமானவர்களை அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கு இராணுவ புலனாய்வு துறையில் இருக்கின்ற சில பிரிவினர் தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதன் ஒரு கட்டமாகவே மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்ட காலப் பகுதியில் வவுனதீவு பொலிஸார் கொலை செய்யப்பட்டதாகவும் சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.