தாழமுக்கம் காரணமாக 2058 குடும்பங்கள் மன்னாரில் பாதிப்பு: மீனவர்களின் படகுகளும் சேதம்
In இலங்கை December 3, 2020 5:30 am GMT 0 Comments 1384 by : Yuganthini
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது.
இந்நிலையில் மாவட்டத்திலுள்ள 5பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் 1108 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 845பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 950 குடும்பங்களைச் சேர்ந்த 3045பேர், 15 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு, நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கான சமைத்த உணவுகளை வழங்க பிரதேசச் செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலகர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காற்றுடன் கூடிய மழை காரணமாக வெள்ள நீர் வீடுகளுக்குள் சென்றுள்ளமையினாலும், வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளமையினாலும் மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் காற்று மற்றும் மழை காரணமாக தலைமன்னார் ஊர்மனை, தலை மன்னார் பியர், பேசாலை, விடத்தல்தீவு, சாந்திபுரம் மற்றும் சௌத்பார் ஆகிய கிராமங்களிலுள்ள மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
குறித்த புயல் தாக்கத்தினால் மீனவர்களின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான படகு உட்பட கடற்றொழில் உபகரணங்கள் சேதமாகி உள்ளன.
மேலும் தலை மன்னார் பியர் கடற்கரையோரப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் சில காணாமல் போயுள்ளதுடன் படகு வாடிகள், மீன்பிடி உபகரணங்கள் சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களினதும், மீனவர்களினதும் பாதிப்புக்கள் தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேல், பிரதேசச் செயலாளர்கள், மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.