திருகோணமலையில் வியாபாரிகளால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!
In இலங்கை January 20, 2021 11:42 am GMT 0 Comments 1694 by : Yuganthini

திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, வியாபாரிகளால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கண்டி வீதியில், மட்டிக்களி பகுதியில் வீதியோர மீன் வியாபாரிகளது உடமைகளை நகர சபையினர் கையகப்படுத்தி, அப்பகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (புதன்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
கொரோனா தாக்கம் அதிகரித்திருந்தபோது பொதுச்சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அப்போது வீதியோரங்களில் வியாபாரம் செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் பலர் வீதியோர வியாபார நடவடிக்கைகளை இன்றுவரை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த வியாபாரிகளிடம் இருந்து நாள் ஒன்றுக்கு 100 முதல் 150 ரூபாய் வரை நகர சபையால் நிதி வசூலிக்கப்பட்டு அவர்களுக்கு பற்றுச்சீட்டும் வழங்கப்பட்டிருந்தது.
எனினும், திடீரென நகர சபையினால் முன்னெடுக்கப்பட்ட குறித்த நடவடிக்கையின் காரணமாக தாம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மக்கள் அன்றாடம் நடமாடும் பகுதிகளில் குறித்த வியாபாரத்தினை முன்னெடுத்தால் மாத்திரமே போதிய அளவு வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடியுமெனவும் நகர சபையினால் ஒதுக்கப்பட்டிருக்கும் பகுதியில் வியாபாரத்தை முன்னெடுத்தால் தமக்கு நஷ்டம் ஏற்படும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு தமது பிரச்சினைக்குத் தகுந்த முடிவினைப் பெற்றுத்தருமாறு வீதியோர வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.