திருகோணமலை ஊடாக தமிழ்நாட்டை நோக்கி நகரவுள்ள புரவி புயல்!

இலங்கையின் திருகோணமலை அருகே நாளை புரவி புயல் கரையை கடக்கும் நிலையில், கன்னியாகுமரி-பாம்பன் இடையே வரும் நான்காம் திகதி புயல் கரை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
இது புரவி புயலாக உருவாக வாய்ப்புள்ளதாகவும், நாளை மாலை அல்லது இரவு இலங்கையின் திருகோணமலை அருகே கரையைக் கடக்கும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடக்கும்போது 75 முதல் 85 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்தப் புயலால் தென்தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை அருகே கரையைக் கடக்கும் புயல் உடனடியாக மேற்கு நோக்கி நகர்ந்து மன்னார் வளைகுடா ஊடாக கன்னியாகுமரி பகுதிக்கு வரும் மூன்றாம் திகதி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்பின்னர், வரும் நான்காம் திகதி கன்னியாகுமரிக்கும் பாம்பனுக்கும் இடையில் புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.