திருக்கேதீஸ்வர ஆலய காணி பிக்கு ஒருவரினால் அபகரிப்பு: சாள்ஸ் நிர்மலநாதன் நேரில் சென்று ஆராய்வு
In இலங்கை December 29, 2020 8:18 am GMT 0 Comments 3365 by : Yuganthini
மன்னார், திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை ‘மாதோட்ட’ விகாரையின் பிக்கு, அபகரித்து வருவதாக அப்பிரதேசமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குறித்த பகுதிக்கு நேரில் சென்று இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, பார்வையிட்டுள்ளார்.
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான 5 ஏக்கர் காணி, சைவ மங்கையர் கழகத்துக்கு 99 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது.
குறித்த காணியானது நீண்ட காலமாக திருக்கேதீச்சர ஆலயத்தின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளது. இக் காணியானது நாட்டில் ஏற்பட்ட இடப் பெயர்வு காரணமாக இராணுவம் அவ்விடத்தில் நிலை கொண்டது.
அதனைத் தொடர்ந்து குறித்த காணி, திருக்கேதீச்சர ஆலயத்திடம் மீளவும் கையளிக்கப்பட்டது.
இந்நிலையில் அவ்விடத்தில் அமைக்கப்பட்ட விகாரை, ஆலய காணியிலும் தனியார் காணியிலும் அமைக்கப்பட்டிருந்தது. மிகுதி காணி ஆலய நிர்வாகத்தின் பராமரிப்பில் இருந்தது.
எனினும், கடந்த தினங்களாக விகாரையிலுள்ள பிக்கு, மிகுதி காணியை அபகரிக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகம் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
அதனைத் தொடர்ந்தே இன்று காலை குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், குறித்த காணி அபகரிப்பு தொடர்பாக துரித நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தெரிவித்தார்.
இதன்போது மன்னார் பொலிஸார், ஆலய நிர்வாகத்தினர், ஆலய பிரதம குரு ஆகியோர் குறித்த பகுதிக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.