திலீபனின் நினைவிடத்தில் ஒன்றுகூடுமாறு அழைப்பு!

தியாகி திலீபனின் நினைவு தினத்தில் அவரது நினைவிடத்தில் அனைவரையும் ஒன்றுகூடுமாறு ஜனநாயக போராளிகள் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
அந்த வகையில் தியாகி திலீபனின் 31 ஆவது ஆரம்ப நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அதில் கலந்துகொள்ளுமாறு அனைவருக்குமான அழைப்பை இக்கட்சி அறிக்கையூடாக விடுத்துள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழர் தாயக அரசியல் பரப்பில் ஆட்சி அதிகாரத்தில் யார் ஆதிக்கம் செலுத்தும் சக்தி என்பதற்கான முனைப்புக்கள் தீவிரம்பெற்றுவரும் இச்சூழலில் ஓடுக்கப்பட்ட ஓர் தேசிய இனத்தின் அரசியல் பொருளாதார சமூகவிடுதலையினை நேசித்தவர் திலீபன். அதற்கு வலுச்சேர்த்து எம் இனத்தின் நியாயப்பாடான அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரம் கூட அருந்தாது உண்ணாநோன்பிருந்து நல்லூர் வீதியில் மூச்சடங்கிப்போனவர் தியாகி திலீபன்.
இற்றைவரை திலீபனின் ஒற்றைக்கோரிக்கை கூட நிறைவேறாதநிலையில் துன்பத்தின் நீட்சியில் தமிழினம் இடர்படும் இச்சூழலில் தியாகி திலீபனின் நினைவுநாட்கள் நடைபெறும் இக்காலங்களில் உறவுகள் கேளிக்கை களியாட்டங்களை தவிர்த்து திலீபனின் நினைவுகளைச்சுமந்து உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்குமாறு தாயக மற்றும் புலம்பெயர் உறவுகளையும் வேண்டிநிற்கின்றோம்.
தியாகி திலீபன் எங்களோடு இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவரின் கனவு இன்னும் சுவாசித்துக்கொண்டுதான் இருக்கிறது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.