துணைத் தலைவரின் பணி குறித்து விபரிக்கிறார் ரோஹித் சர்மா!
உலகக்கிண்ண தொடருக்கான இந்திய அணிக்கு துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ரோஹித் சர்மா, தனது பணி குறித்து விபரித்துள்ளார்.
இங்கிலாந்தில் இந்த மாதம் ஆரம்பமாகும் உலகக்கிண்ண தொடருக்காக ஒவ்வொரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்த நிலையில், தனது பொறுப்பு குறித்து ரோஹித் சர்மா கூறுகையில், “துணைக் தலைவராக எனது பொறுப்பு விராட் கோஹ்லியின் தலைவர் பதவிக்கு மாற்றாக இருக்க வேண்டும் என்பதுதான். அவருக்கு சந்தேகம் அல்லது உதவி ஏதாவது வேண்டும் என்றால், நான் உதவி புரிவேன். இதைத்தான் நாங்கள் கடந்த சில வருடங்களாக கடைப்பிடித்து வருகிறோம்.
டோனியின் சிந்திக்கும் முறை நமது வீரர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும். அவர், இளைஞர்களைச் சிறப்பாக வழிநடத்துவார். நமது அணியில் சாஹல், குல்தீப் யாதவ் என இரண்டு இளம் ரிஸ்ட் சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். களத்தில் டோனியின் ஆலோசனை இவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.
விக்கெட் காப்பாளர் பதவியை செய்துகொண்டே ஆடுகளம் எப்படி உள்ளது, இந்த மைதானத்தில் எப்படிப் பந்துவீச வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்குவார். அவரது அனுபவம், அணிக்கு நீண்ட காலமாக அளித்துவரும் பங்களிப்பு ஆகியவை அளப்பரியது.
உலகக் கிண்ண தொடரில், அவரது இடம் மிகவும் முக்கியமானதாகும். அவர், அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் உறுதுணையாக இருப்பார். இந்தத் தொடரில், ஒரு துணைத் தலைவராக என்னுடைய பணி என்பது, தலைவர் விராட் கோஹ்லிக்கு உறுதுணையாக இருப்பது.
டோனி, உலகக்கிண்ண தொடரில் அணித்தலைவராக இருந்தபோது சேவாக், சச்சின் போன்ற சிரேஷ்ட வீரர்கள் இருந்தார்கள். இக்கட்டான சூழலில் அவர்கள் டோனிக்கு வழிகாட்டினார்கள். தற்போது அந்தப் பொறுப்பு எங்களுக்கு வந்துள்ளது. குழப்பமான நேரத்தில் அணித்தலைவருக்கு உறுதுணையாக இருந்து, அவருக்குத் தேவைப்படும் ஆலோசனைகளை வழங்குவதே எங்கள் பணி” என கூறினார்.
கிரிக்கெட் உலகில் மூன்று முறை இரட்டை சதம் அடித்த மகத்தான சாதனைக்கு சொந்தக்காரரான ரோஹித் சர்மா, இந்திய அணிக்கு பல தொடர்களில் தலைமை தாங்கி இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடிக் கொடுத்துள்ளார்.
குறிப்பாக இலங்கையில் நடைபெற்ற சுதந்திரக் கிண்ண தொடரில், இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி அணிக்கு சம்பியன் பட்டத்தையும் வென்றுக்கொடுத்துள்ளார்.
இதனையும் தாண்டி தற்போது இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐ.பி.எல். ரி-20 தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராகவுள்ள ரோஹித் சர்மா, அந்த அணிக்காக மூன்று முறை சம்பியன் பட்டத்தை வென்றுகொடுத்துள்ளார்.
32 வயதான ரோஹித் சர்மா, இதுவரை 206 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 8010 ஓட்டங்களை குவித்துள்ளார். அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை 264 ஆகும். சராசரி 47.4 ஆகும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.