துப்பரவு செய்யப்படாத காணிகளில் துஷ்பிரயோகங்கள்! – பாலபிரசன்னா
In இலங்கை September 10, 2018 10:01 am GMT 0 Comments 1688 by : Yuganthini
வவுனியாவில் பல தனியார் காணிகள் துப்பரவு செய்யப்படாமல் காணப்படுகின்றமையால் அப்பகுதிகளில் துஸ்பிரயோக செயற்பாடுகள் அதிகரித்து காணப்படுவதாக வவுனியா நகரசபை உறுப்பினர் பால பிரசன்னா தெரிவித்துள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) வவுனியா பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் இடம்பெற்றபோது வவுனியாவிலுள்ள காணி விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இதன்போது வன வளத்திணைக்களத்தினால் ஆக்கிரமிப்புக்குள்ளாகும் விடயங்கள், பார்த்தீபன் என்பவர் மக்களுக்கு காணி வழங்குவது தொடர்பாக முகப்பத்தகத்தில் பதிவிடும் கருத்துக்கள் மற்றும் மேலிடங்களுக்கு காணி வழங்கியமை பிழை ஆகிய விடயங்கள் தொடர்பாக எழுத்து மூலம் தெரிவித்து வருவதாகவும் பிரதேச செயலாளரினால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் கருத்து தெரிவித்த பாலபிரசன்னா, “பிரதேச சபைக்குட்பட்ட பெரியார்குளம் பகுதியிலுள்ள தனியார் காணியொன்று நீண்டகாலமாக துப்பரவு செய்யப்படாது காணப்படுவதனால் அங்கு இளைஞர்கள் மதுபானம் அருந்துவதற்கான இடமாகவும் பெண்களை அழைத்து வந்து துஸ்பிரயோகத்திற்குள்ளாகும் இடமாகவும் காணப்படுவதால் அது தொடர்பில் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படவேண்டும்” என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதேச சபை தலைவர் து.நடராஜசிங்கம், “வவுனியா ஓமந்தையிலுள்ள அரச வீட்டுத்திட்டத்திலும் பல காணிகள் காடுகளாக காணப்படுகின்றது.
குறித்த காணியில் உரிமையாளர்கள் அப்பகுதியில் குடியேறாதமையினாலேயே இவ்வாறான நிலை காணப்படுகின்றது. எனவே இவ்விடயம் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்” என வலியுறுத்தினார்.
இதன்போது கருத்து தெரிவித்த வட மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், இவ்வாறான காணிகளை பிரதேச சபையோ நகர சபையோ துப்பரவு செய்து உரிமையாளரிடம் அதற்கான பணத்தை பெற்றுக்கொள்ளும் முறைமை உள்ளது அது தொடர்பில் ஆராயவேண்டும் என தெரிவித்தார்.
இதன் பின்னர் கருத்து தெரிவித்த அபிருத்திகுழு இணைத்தலைவர் சிவசக்தி ஆனந்தன், உடனடியாக காணி உரிமையாளர்களுக்கு பிரதேச செயலகத்தினூடாக காணிகளை துப்பரவு செய்யுமாறு கடிதம் அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டதுடன் அதன் பின்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அவர் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.