தூதரக அதிகாரிகளின் வெளியேற்றம்: நட்பு நாடுகளுடன் பரிசீலிக்க பிரித்தானியா தீர்மானம்!
In இங்கிலாந்து March 18, 2018 6:07 am GMT 0 Comments 1615 by : Suganthini
பிரித்தானியத் தூதரக அதிகாரிகளை வெளியேற்ற ரஷ்யா தீர்மானித்துள்ளதைத் தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக, தமது நட்பு நாடுகளுடன் பிரித்தானியா பரிசீலிக்குமென, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.
லண்டனில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற கொன்சர்வேட்டிவ் கட்சிக் கூட்டத்தின்போதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘பிரித்தானியப் பிரஜைகளுக்கும், பிரித்தானியாவில் வசிக்கும் ரஷ்யப் பிரஜைகளுக்கும் எதிராக விடுக்கப்படும் அச்சுறுத்தல்களை எம்மால் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. எனவே, அச்சுறுத்தல்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக, எமது நட்பு நாடுகளுடன் பரிசீலித்து சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்றார்.
ரஷ்யாவின் முன்னாள் உளவாளி செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியாவும் மயக்கமடைந்த நிலையில், Salisbury பகுதியில் இம்மாதம் 4ஆம் திகதி மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, இவர்களுக்கு நஞ்சூட்டப்பட்டதாக பிரித்தானியப் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து, பிரித்தானியாவிலுள்ள ரஷ்யத் தூதரக அதிகாரிகள் 23 பேரை வெளியேறுமாறு பிரித்தானியா பணித்துள்ள நிலையில், இதற்குப் பதிலடியாக ரஷ்யாவிலுள்ள பிரித்தானியத் தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு ரஷ்யாவும் பணித்துள்ளது. இவ்வாறான குழப்பத்துக்கு மத்தியில் பிரித்தானியப் பிரதமரின் மேற்படி கருத்து வெளிவந்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.