தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரச நியமனம்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, அரச நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை), முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் இந்த நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக கடந்த மே மாதம் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. அத்தோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரச நியமனம் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அவர்களுக்கான பதவிகள் இன்று வழங்கிவைக்கப்பட்டன. எனினும் பாதிக்கப்பட்டவர்களில் 10 குடும்பத்தினருக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏனைய மூன்று குடும்பத்திலும் ஒரு குடும்பத்தினர் தமக்கு இந்த வாய்ப்பு தேவையில்லை எனக் கூறிவிட்டனர்.
மற்றைய இரு குடும்பத்திலும் உள்ள பிள்ளைகள் 18 வயதை கடக்காத நிலையில், அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கப்பெறவில்லை.
தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்திவந்தனர்.
குறித்த ஆலையினால், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் புற்றுநோய்க்கு ஆளாவதாகவும், மூச்சுதிணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் நிலைமை ஏற்படுவதாகவும், குடிக்கும் நிலத்தடி நீர் மாசடைவதாகவும் அம்மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தனர்.
இந்நிலையில், அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய போது, பொலிஸார் முன்னெடுத்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
அதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரிவிட்ட நிலையில், ஆலை மூடப்பட்டது.
எவ்வாறாயினும் ஆலையினால் பொதுமக்களுக்கு பாதிப்பு உள்ளதா என்பது தொடர்பான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஆயினும் குறித்த துப்பாக்கி சூட்டிற்கு காரணம் கண்டறியும் பொருட்டு, சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.