தென்னிந்தியாவில் உள்ள ஈழ அகதிகளை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை – அரசாங்கம்
In இலங்கை December 1, 2020 2:38 am GMT 0 Comments 1413 by : Dhackshala

தென்னிந்தியாவில் உள்ள ஈழ அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஆலோசனைக் குழு கூட்டத்தின்போதே அமைச்சர் தினேஸ் குணவர்தன இதனை தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன் உள்ளிட்டவர்கள் தென்னிந்தியாவில், ஒரு இலட்சத்துக்கும் அதிகமான ஈழ அகதிகள் வசிக்கின்ற நிலையில் அவர்களில் 80,000 பேர் வரையில் இந்தியாவில் பதிவுசெய்து கொண்டுள்ளனர் என்றும் இன்னும் 20 சதவீத மாணவர்கள் அங்கு பதிவு செய்யப்படாமல் மீண்டும் நாடு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
எனினும் அவர்கள் நாடு திரும்புவதற்கு இவ்வளவு காலம் இந்தியாவில் தங்கியிருந்தமைக்கான விசா கட்டணத்தை இந்திய அரசாங்கம் கோருவதாகவும் அதனால் அங்கிருந்து வெளியேற முடியாத நிலை இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் தினேஸ் குணவர்தன, அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த மார்ச் மாதம் அறிவுறுத்தி இருந்ததாகவும் எனினும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்த நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் உரிய தருணத்தில் அவர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இதன்போது கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சின் செயலாளர், தமிழகத்திலிருந்து நாடு திரும்ப விரும்புகின்ற இலங்கை அகதிகளை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் கைவிடப்படவில்லை என்றும் தற்போதைய சூழ்நிலை காரணமாக அதில் தாமதம் ஏற்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார்
அதேநேரம் அவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கைக்கு எவ்விதமான தடையும் இல்லையெனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.