தென் சீனக்கடல் பகுதியில் பறந்த போர் விமானம் – சீனா கண்டனம்!

தென் சீனக் கடல் பகுதியில் பி-52 ரக குண்டு வீசக்கூடிய போர் விமானங்களை அமெரிக்கா பறக்கவிட்டமைக்கு சீனா கண்டனம் வெளியிட்டுள்ளது.
தென் சீனக் கடல் மற்றும் கிழக்கு சீனக் கடல் பகுதியின் சர்வதேச வான் எல்லையில் ஜப்பானுடன் இணைந்து பி-52 ரக குண்டு வீச்சு விமானங்களை பயன்படுத்தி கூட்டு போர் விமானப் பயிற்சியை மேற்கொண்டதாக கடந்த புதன்கிழமை அமெரிக்கா அறிவித்திருந்தது.
இந்தநிலையிலேயே இதற்கு சீனா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சீன பாதுகாப்பத்துறை செய்தித் தொடர்பாளர் ரென் குவோகியாங்,
‘பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்கா தனது போர் விமானங்களை பறக்கச் செய்வதை நாங்கள் எதிர்த்து வருகிறோம்’ என கூறியுள்ளார்.
சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் மற்றும் கிழக்கு சீனக் கடல் பகுதிகளை நீண்ட காலமாக சீனா உரிமைக் கோரி வருகிறது.
அத்துடன், குறித்த பகுதியை வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூணே மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளும் உரிமை கோரி வருகின்றன.
தென் சீனக்கடல் எரிசக்தி வளங்கள் மீன்வளம் மற்றும் முக்கிய கடல் வழிப் பாதையாக திகழ்கிறது.
இதனாலேயே தென் சீனக் கடலில் இராணுவ நிலைகளை நிறுவக் கூடிய அளவிற்கு செயற்கைத் தீவகளை உருவாக்கி அப்பகுதிக்கு சீனா முழு உரிமை கொண்டாடி வருவதாக கூறப்படுகிறது.
எனினும் தென் சீனக் கடல் சர்வதேச பகுதி எனவும் அங்கு பல நாடுகளின் கப்பல்கள் சுதந்திரமாக சென்று வர உரிமை உள்ளது எனவும் அமெரிக்கா தெரிவித்து வருகிறமைக் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.