தென் சீனக் கடலில் பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதித்த சீனாவுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்!

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் சீனா ஏவிய ஏவுகணை விவகாரத்தினை, அமெரிக்கா கடுமையாக கண்டித்துள்ளது.
தென் சீனக் கடலில் பாலிஸ்டிக் ஏவுகணைகளை சீனா ஏவுவது, பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை (பென்டகன்) தெரிவித்துள்ளது.
பாரசெல் தீவுகளைச் சுற்றியுள்ள இராணுவப் பயிற்சிகளின் போது சீனா நான்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது என பென்டகன் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை சர்ச்சைக்குரிய கடல்களில் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்கான நாட்டின் 2002ஆம் ஆண்டு உறுதிப்பாட்டை கேள்விக்குள்ளாக்கியது என பென்டகன் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘தென்சீனக் கடலில் சர்ச்சைக்குரிய நிலப்பரப்பில் இராணுவப் பயிற்சிகளை நடத்துவது பதற்றங்களைத் தணிப்பதற்கும் நிலைத்தன்மையைப் பேணுவதற்கும் எதிர்மறையானது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தசாப்தத்தில், தென் சீனக் கடலில் பல சர்ச்சைக்குரிய திட்டுகள் மற்றும் வெளிப்புறங்களில் இராணுவ நிலைகளை சீனா உருவாக்கியுள்ளது.
எனினும், தன் பகுதியில் மேற்கொள்ளும் கட்டுமானப்பணிகள் அதன் இறையாண்மைக்குட்பட்டதே. இதற்கும் இராணுவமயமாக்கலுக்கும் தொடர்பில்லை என சீனா மறுத்துள்ளது.
தென் சீனக் கடல் பகுதியில், தமக்கும் உரிமை உள்ளதாக வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, தைவான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளும் உரிமை கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.