தேசிய தௌஹீத் ஜமாத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய நடவடிக்கை!

தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஜமாத் ஈ மில்லது இப்ராஹிம் ஆகிய அமைப்புகளுடன் தொடர்புடையவர்களை, அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த அமைப்புகளின் சொத்துக்கள் தொடர்பாகவும் ஆராயுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து ஆராய்வதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இராணுவத்தினரை ஈடுபடுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தடை செய்யப்பட்ட குறித்த இரு அமைப்புகளுடன் தொடர்புகளைப் பேணும் ஏனைய அமைப்புகள் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஜமாத் ஈ மில்லது இப்ராஹிம் ஆகிய அமைப்புகளை இலங்கைக்குள் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி என்ற ரீதியில் 2019 முதலாம் இலக்கம் அவசரநிலை சட்டத்தின் கீழுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.