தேசிய பொங்கல் தின விழா இம்முறை ரத்து – துமிந்த திஸாநாயக்க
In இலங்கை January 13, 2020 9:40 am GMT 0 Comments 6059 by : Dhackshala

நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களையும் ஒன்றுபடுத்தி கடந்த அரசாங்கம் முன்னெடுத்த தேசிய பொங்கல் தின விழா இம்முறை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய தேவையற்ற செலவுகளை குறைத்து மூன்று மாவட்டங்களில் உள்ள தமிழ் இளைஞர், யுவதிகளை உள்ளடக்கி பொங்கல் தின நிகழ்வை நடத்த உத்தேசித்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
தேசிய பொங்கல் தின விழா குறித்து இன்று (திங்கட்கிழமை) கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதாக குறிப்பிட்டு கடந்த அரசாங்கம் மூன்று இனத்தவர்களின் பிரதான பண்டிகைகளுக்கு 25 மாவட்டங்களிலும் உள்ள இளைஞர், யுவதிகளை ஒன்றிணைத்து தேசிய நிகழ்வாக பொங்கல் பண்டிகையைக் கொண்டாடப்பட்டது.
இதனால் எவ்வித பயனும் மாற்றங்களும் ஏற்படவில்லை. மாறாக வீண் செலவுகள் மாத்திரமே மிஞ்சியது.
உலகவாழ் தமிழர்கள் நாளை மறுதினம் தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடவுள்ளனர். இந்நிலையில் 25 மாவட்ட இளைஞர், யுவதிகளை ஒன்றிணைத்து தைப்பொங்கலைக் கொண்டாட தீர்மானிக்கவில்லை.
இதனால் பாரிய செலவுகள் ஏற்படுகின்றன. அதனால் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் உள்ள இளைஞர்களை ஒன்றுபடுத்தி பொங்கல் தின நிகழ்வினை கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்விற்கு செலவாகும் நிதியினை ஒவ்வொரு இளைஞர் கழக அபிவிருத்திக்கும் செயற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இனிமேல் இடம்பெறும் அனைத்துப் பண்டிகைகளிலும் இம்முறையினைக் கையாளவுள்ளோம்” என மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.