தேர்தல் செயல்முறை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தும் பணி

இந்தியாவில் தேர்தல் செயல்முறையின் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த கோவிஷீல்ட் தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. அவசரகால பயன்பாட்டிற்கு கோவிஷீல்ட் தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.
இதேபோல் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என நிபுணர் குழு பரிந்துரை வழங்கியுள்ளது. எனவே, இந்த மருந்துக்கும் மத்திய அரசின் அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தடுப்பூசியை மக்களுக்கு குழப்பம் எதுவும் இன்றி விரைவாக கொண்டு சேர்ப்பதை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் நேற்று தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. இது வெற்றிகரமாக அமைந்ததால் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தடுப்பூசி போடுவதற்கான அடுத்தகட்ட பணிகள் தொடங்கி உள்ளன. தடுப்பூசி போடுவதற்காக ஏற்கனவே சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியிருப்பதாவது:-
தடுப்பூசி செலுத்தும் பணியானது, தேர்தல் செயல்முறைகளின் அடிப்படையில், வாக்குச்சாவடி வாரியாக மேற்கொள்ளப்படவுள்ளது. 719 மாவட்டங்களில் 57,000 இற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பயிற்சியை முடித்துள்ளனர். தடுப்பூசி போடுவதற்காக 96,000 பணியாளர்கள் இதுவரை பயிற்சி பெற்றுள்ளனர்.
மிகப்பெரிய கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணியில் மத்திய சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது.
கொரோனா தடுப்பூசியை முதலில் செலுத்த உள்ள, முன்னுரிமை பயனாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் சீரான அளவில் தடுப்பூசி விநியோகத்தை உறுதி செய்வதற்காக மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் தளமான ‘கோவின்’ உருவாக்கப்பட்டுள்ளது.“ இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.