பெண் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்!
In இலங்கை September 17, 2018 4:09 am GMT 0 Comments 1892 by : Yuganthini

வட.மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் ஊடக இணைப்பாளர் என அறிமுகப்படுத்திய ஒருவர் தொலைபேசி ஊடாக தன்னை அச்சுறுத்தினாரென யாழிலுள்ள பெண் ஊடகவியலாளர் ஒருவர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அத்துடன் “எதிர்வரும் 30ஆம் திகதி தமிழ் மக்கள் அதிரும்படியான செய்தி வரும். அதை பிரசுரிக்க தயாராக இருங்கள்” என சந்தேகநபர் தெரிவித்ததாகவும் அப்பெண் ஊடகவியலாளர் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றில் வட.மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் தொடர்பான செய்தி வெளிவந்திருந்தது.
குறித்த செய்தியானது தனக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்தது எனவும் அந்த செய்தி உண்மைக்கு புறம்பான செய்தி எனவும் சம்பந்தப்பட்டவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
அதேவேளை குறித்த உறுப்பினரின் ஆதரவாளர்கள் சிலர் ஒன்றிணைந்து உறுப்பினர் தொடர்பிலான செய்தி வெளிவந்த பத்திரிகையின் பிரதிகள் சிலவற்றையும், அப்பத்திரிக்கை பிரதி போன்று பெரியளவில் பிரதி செய்யப்பட்டதையும் தீயிட்டு கொளுத்தி போராட்டம் நடத்தியிருந்தனர்.
அந்நிலையில் குறித்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உறுப்பினருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சிலர் போராட்டம் நடத்தி உறுப்பினரின் உருவ பொம்மையை எரித்தனர்.
அவை தொடர்பிலான செய்தியையும் குறித்த பத்திரிக்கை வெளியிட்டிருந்தது. அதன் பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை வட.மாகாண சபை உறுப்பினரின் ஆதரவாளர்கள் சிலர் மீண்டும் குறித்த பத்திரிகைக்கு எதிராக போராட்டம் நடாத்தினார்கள்.
அந்தப் போராட்டம் தொடர்பிலான செய்தியினை குறித்த பத்திரிகை பிரசுரிக்கவில்லை. அது தொடர்பில் குறித்த மாகாண சபை உறுப்பினரின் ஊடாக இணைப்பாளர் என தன்னை அறிமுகப்படுத்திய நபர் குறித்த பத்திரிகையின் அலுவலக செய்தியாளருக்கு தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு ஏன் அந்த போராட்டம் தொடர்பிலான செய்திகளை வெளியிடவில்லை என கேட்டுள்ளார்.
அதற்கு செய்தியாளர், அது தொடர்பில் பிரதம ஆசிரியரிடம் கேளுங்கள் என பதிலளித்துள்ளார். அதற்கு அவரை அச்சுறுத்தியுள்ளார். குறித்த அச்சுறுத்தல் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, அலுவலக செய்தியாளர் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் யாழ். பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.