தோட்டத் தொழிலாளர்களுக்காக திருகோணமலையிலும் ஆர்ப்பாட்டம்!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கைக்கு ஆதரவாக மேலுமொரு ஆர்ப்பாட்டம் திருகோணமலையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்ட அகரம் மக்கள் மய்யத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட் குறித்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தினைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
இவ் ஆர்ப்பாட்டம் அநுராதபுர சந்தி சந்தைக் கட்டடத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை, 1000 ரூபாயாக உயர்த்துமாறும், கூட்டு ஒப்பந்தம் இரத்துச்செய்யப்பட்டு சம்பள நிர்ணய சபை ஊடாக குறித்த பிரச்சினைக்கான தீர்வினை அரசு பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அத்துடன் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டுமெனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
நாடாளாவிய ரீதியில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பல ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் இடம்பெற்றுவருகின்றன. அந்தவகையில் கொழும்பு, கிளிநொச்சி, மட்டக்களப்பு மற்றும் ஹட்டன் போன்ற பகுதிகளிலம் இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.