நட்டு முதல் போட்டியிலேயே மூன்று விக்கெட்டுகள்: ஆஸியை சொந்த மண்ணில் வீழ்த்தியது இந்தியா!

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 11 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
கன்பெர்ரா மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கே.எல். ராகுல் 51 ஓட்டங்களையும் ஜடேஜா ஆட்டமிழக்காது 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில், ஹென்ரிக்ஸ் 3 விக்கெட்டுகளையும் மிட்செல் ஸ்டாக் 2 விக்கெட்டுகளையும் செம்பா மற்றும் ஸ்வெப்சன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியில் ரவிந்திர ஜடேஜா துடுப்பெடுத்தாடும் போது பந்து தாக்கியதால் அவர் உபாதைக்குள்ளாகினார். இதனால் அவருக்கு மாற்றீடாக யுஸ்வேந்திர சஹால் களமிறங்கினார்.
ஆனால் இதற்கு போட்டி நடுவரிடம், அவுஸ்ரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து 162 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலியா அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் இந்தியா அணி 11 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
அவுஸ்ரேலிய அணியில் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஆரோன் பின்ஞ் 35 ஓட்டங்களையும் ஆர் ஸி ஷோர்ட் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்திய அணியின் பந்துவீச்சில், தனது ரி-20 சர்வதேச அறிமுக போட்டியிலேயே நடராஜன் 3 விக்கெட்டுகளையும், ஜடேஜாவின் உபாதைக்கு மாற்றீடாக களமிறங்கிய யுஸ்வேந்திர சஹால் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மேலும், தீபக் சஹார் 1 விக்கெட்டினை வீழ்த்தினார்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமான யுஸ்வேந்திர சஹால் தெரிவுசெய்யப்பட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.