நம்பிக்கையில்லா பிரேரணை: திறந்த வாக்கெடுப்பு நடத்த தீர்மானம்! (2ஆம் இணைப்பு)

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீது திறந்த முறையில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று (புதன்கிழமை) முற்பகல் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலத்திரனியல் வாக்கெடுப்பு முறையால் அண்மையில் நாடாளுமன்றில் ஏற்பட்ட குழப்பநிலையைக் கருத்திற்கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
55 உறுப்பினர்களுடைய கையெழுத்துக்களுடன் பிரதமர் ரணிலுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியினர் நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை சமர்ப்பித்துள்ளனர். குறித்த பிரேரணை மீது, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி விவாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து கட்சித் தலைமைகளின் முக்கிய கூட்டம் இன்று!
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று (புதன்கிழமை) கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
இன்று காலை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
இதன்போது நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் குறித்த காலம் மற்றும் அது தொடர்பான கட்சிகளின் நிலைப்பாடுகள் குறித்து இந்தக் கலந்துரையாடலில் பேசப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் ஒன்றிணைந்த எதிரணியினரால், பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்தப் பிரேரணையில் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருந்தனர். அந்தவகையில் இது தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுப்பதற்காகவே குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.