நவாஸ் ஷெரீப் லண்டன் செல்வதற்கான தடை நீங்கியது!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நீண்ட சர்ச்சைகளுக்கு பின்னர் மருத்துவ சிகிச்சைக்காக நாளை (செவ்வாய்க்கிழமை) லண்டன் நகருக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழல் வழக்கில் சிக்கியிருந்த அவருக்கு சுகவீனம் ஏற்பட்டதையடுத்து சிகிச்சைகளை பெறுவதற்காக பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இருந்த போதும் லண்டனுக்கு சென்று சிகிச்சை பெற்றால் மட்டுமே அவரது உடல்நிலை வழமைக்கு திரும்பும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
எனினும், வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து அவரது பெயரை பாகிஸ்தான் அரசாங்கம் நீக்காத நிலையில், அவர் லண்டன் செல்வதில் சிக்கல் எழுந்தது.
நவாஸ் ஷெரீப் லண்டன் செல்லவேண்டுமானால் பாகிஸ்தான் பெறுமதியின் படி 1,500 கோடி ரூபாவுக்கான உறுதி மொழி பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்ற சில நிபந்தனைகளை பிரதமர் இம்ரான்கானின் அரசாங்கம் விதித்திருந்தது.
குறித்த நிபந்தனைகளை ஏற்க மறுத்த நவாஸ் ஷெரீப் இது தொடர்பாக லாகூர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் எந்தவித நிபந்தனையும் இன்றி நவாஸ் ஷெரீப்பின் பெயரை வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து நீக்க அரசுக்கு உத்தரவிட்டனர்.
இதன் மூலம் அவர் லண்டன் செல்வதில் இருந்த தடை நீக்கப்பட்டது. இந்த நிலையில், நவாஸ் ஷெரீப், சிகிச்சைக்காக நாளை (செவ்வாய்க்கிழமை) லண்டன் புறப்பட்டு செல்வார் என பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “அனைத்து வகையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை கொண்ட நோயாளர் காவு வானூர்தியில் அவர் லண்டன் செல்கிறார்” என குறிப்பிட்டார்.
அத்துடன் அவர், “சிறிது காலம் லண்டனில் தங்கி சிகிச்சை பெறும் நவாஸ் ஷெரீப், அதன் பின்னர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.