நாடு முழுவதும் 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி!
In இந்தியா February 10, 2021 5:29 am GMT 0 Comments 1196 by : Krushnamoorthy Dushanthini

நாடு முழுவதும் 21 நாட்களில் 50 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சா் அஸ்வினி சௌபே தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்து மாநிலங்களவையில் விளக்கம் அளித்த அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “கொரோனா தடுப்பூசி இயக்கத்தின் தொடக்கத்தில் இதுதொடா்பான செயலியில் இருந்த தற்காலிக தொழில்நுட்பச் சிக்கல் நீக்கப்பட்டது. தடுப்பூசி போடுவதில் இருந்த தயக்கமும், அடுத்தடுத்த அமா்வுகளில் பயனாளிகளின் சந்தேகங்களும் படிப்படியாகத் தீா்க்கப்பட்டன.
ஜனவரி 31-ஆம் திகதி வரை தடுப்பூசி செலுத்திக் கொள்ள மொத்தம் 93.6 இலட்சம் சுகாதார ஊழியா்களும், 77.90 இலட்சம் முன்களப் பணியாளா்களும் பதிவு செய்து கொண்டனா்.
இவா்களில் ஜனவரி 31-ஆம் திகதிவரை 37.58 இலட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தொடக்கத்தில் பாதுகாப்பு குறைவாக இருந்தது. இருப்பினும் தடுப்பூசி பாதுகாப்பு விகிதம் பின்னா் அதிகரிக்கப்பட்டது.
நாடு முழுவதும் 21 தினங்களில் 50 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உலக அளவில் இது ஒரு விரைவான விகிதமாகும்.
கரோனா தடுப்பூசி தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தவும் தடுப்பூசி செயல்முறை தொடா்பான தவறான தகவல்களை நிவா்த்தி செய்யவும் தகவல் தொடா்பு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.