நாடு திரும்பியவர்களை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்து சென்ற சொகுசு பேருந்து விபத்து: 17 பேர் காயம்
In இலங்கை November 27, 2020 5:24 am GMT 0 Comments 2095 by : Yuganthini
ஓமான் நாட்டிலிருந்து நாடு திரும்பிய 25 பயணிகளை யாழ்ப்பாணம் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு ஏற்றிவந்த சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, கிளிநொச்சி, பளை- ஆனைவிழுந்தான் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.45 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது, குறித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, நீர் விநியோக குழாய் மீது மோதி விபத்து இடம்பெற்றிருக்கின்றது. இதன்போது பேருந்தில் பயணம் மேற்கொண்ட 17 பேர் காயமடைந்துள்ளனர்.
இதில் படுகாயமடைந்த 3பேர், உடனடியாக அம்புலன்ஸ் வண்டி ஊடாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஏனையோர் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓமான் நாட்டிலிருந்து நாடு திரும்பிய 254 பேர் தனிமைப்படுத்தலுக்காக விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு, 11 பேருந்துகளில் அழைத்துவரப்பட்ட நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்தில் சுகாதார பிரிவினர், படையினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.