நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுப்பு – சாகல
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
194 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படுகின்ற பாத்தவிட்ட, குணற்துவத்த பாலத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து சாதாரண மக்களின் நாளாந்த வாழ்க்கை முழுமையாக பாதிப்படைந்ததுடன், மக்கள் மனங்களில் அச்ச உணர்வுடன் வாழ்கின்றார்கள்.
இந்நிலையை மாற்றியமைக்கும் பொருட்டு தேசிய பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
இந்த தாக்குதலையடுத்து சீர்குலைந்துள்ள மக்களின் வாழ்க்கை மற்றும் பாதுகாப்பினை உறுதிசெய்து, மீளக் கட்டியெழுப்பும் பொறுப்பினை அரசாங்கம் தற்பொழுது நிறைவேற்றியுள்ளது. எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய விசாரணைகள் தொடர்பான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
தீவிரவாதம் குறித்து மக்கள் கொண்டுள்ள அச்சத்தைப் போக்கி மீண்டும் பழைய நிலைக்கு நாட்டை மாற்றியமைப்பதற்குத் தேவையான அனைத்து செயற்பாடுகளும் தற்சமயம் முன்னெடுக்கப்படுகின்றன” என்று அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.