கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அமெரிக்க தூதுவர் விஜயம் (3ஆம் இணைப்பு)
In ஆசிரியர் தெரிவு April 25, 2019 6:40 am GMT 0 Comments 2444 by : Dhackshala
கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் விஜயம் செய்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் சர்வகட்சி மாநாடு தற்போது இடம்பெற்று வருகின்றது.
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதல்கள் குறித்து அமெரிக்கா முன்கூட்டியே அறிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த விடயம் குறித்து அமெரிக்கா அறிந்திருக்கவில்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையிலும் இலங்கை அதிகாரிகள் அதனை பகிர்ந்துகொள்வதில் தோல்வியை கண்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி தலைமையிலான சர்வகட்சி மாநாடு ஆரம்பம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் சர்வ கட்சி மாநாடு ஆரம்பமாகியுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பமாகியுள்ள மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் வருகை தந்துள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்களையடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை குறித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் வகையில் இம்மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை – ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி மாநாடு
உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்களையடுத்து நாட்டினுள் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ள, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வ கட்சி மாநாடொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த மாநாடு இன்று (வியாழக்கிழமை) முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, சர்வ மத குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை மாலை 4 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் கூடவுள்ளது.
இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் இன்று இரவு ஜனாதிபதி தலைமையில் அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.