நாட்டுக்காக உயிரை இழக்க தயார்!- ஜனாதிபதி சூளுரை
In ஆசிரியர் தெரிவு May 2, 2019 2:27 am GMT 0 Comments 2248 by : Dhackshala
நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் உயிரை பணயம் வைத்தேனும் பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கி எறிவதற்கு உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார்.
கடந்த மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களினால் இலங்கை வாழ் மக்களின் மனங்களில் ஏற்பட்ட வேதனையை பயங்கரவாதத்தை ஒழிக்கும் சக்தியாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மன்றத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, பயங்கரவாதத்தை இல்லாதொழித்து நாட்டின் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு உறுதியுடனும் தன்னம்பிக்கையுடனும் அனைவரும் ஒரே கொடியின் கீழ் ஒன்று திரள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் அனைத்து குடிமக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்திருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, தேசிய பாதுகாப்பு குறித்து வெளிநாட்டு நிபுணத்துவத்துடன் கூடிய விசேட வேலைத்திட்டங்களை பாதுகாப்பு படையினர் நாடளாவிய ரீதியில் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த துன்பியல் சம்பவத்தை தடுப்பதற்கான பொறுப்பை தவறவிட்டவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு நியமிக்கப்பட்ட விசேட விசாரணை குழுவின் இடைக்கால அறிக்கை தனக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்தார். அத்தோடு அதில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் குறித்து சட்டமா அதிபருடன் கலந்துரையாடியதன் பின்னர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாட்டில் உழைக்கும் மக்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்து, அமைதியான நாட்டை கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் பிரிவினையின்றி ஒன்று திரள்வார்கள் என்றும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.