நான்காவது நாளாக தொடரும் காலநிலை மாற்றத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்!
In இங்கிலாந்து April 18, 2019 9:20 am GMT 0 Comments 2393 by : shiyani

காலநிலை மாற்றத்துக்கு எதிராக எக்ஸ்ரிங்க்ஷன் ரெபெல்லியன் (Extinction Rebellion) எனும் குழுவினால் கடந்த திங்கட்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் நான்காவது நாளாக இன்றும் தொடரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்காக இன்னும் கூடுதலான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்தை தூண்டுவதற்காக இப்போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மத்திய லண்டனின் முக்கியபகுதிகள் சிலவற்றை வீதிமறியல் போராட்டங்கள் மூலம் ஸ்தம்பிக்கவைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்றையதினம் கனரி வோர்ப்(Canary Wharf) ரயில்நிலையத்தில் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இப்போராட்டங்களின் விளைவாக இதுவரை சுமார் 400 பேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் நான்காவது நாளாகவும் வீதிமறியல் போராட்டங்களை முன்னெடுக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர்.
மார்பிள் ஆர்ச் (Marble Arch), ஒக்ஸ்போர்ட் சேர்க்கஸ் (Oxford Circus), வோட்டர்லூ பாலம் (Waterloo Bridge), மற்றும் பாராளுமன்ற சதுக்கம் (Parliament Square) ஆகிய பகுதிகளில் வீதிமறியல் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
சங்கிலிகள் மூலமாக தம்மை ரயிலுடன் இணைத்து ஆர்ப்பாட்டம் நடத்திய மூன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் ரயில் சேவைகளை தடுத்து சட்டத்திற்கு முரணாக செயற்பட்டதாக அவர்கள் மீது பொலிஸாரால் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பினின் வீட்டு வேலியுடன் சங்கிலியால் தம்மை இணைத்துக்கொண்டும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.