மூன்று தசாப்தகால யுத்தம் ஏற்படுத்திச் சென்ற அழிவுகளை வாயால் வர்ணிக்க முடியாது. யுத்தம் ஏற்படுத்திய வடுக்களில் இருந்து தங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கு ஈழத் தமிழினம் இன்றுவரை போராடிக் கொண்டுதான் இருக்கின்றது. கடின உழைப்பையும் நம்பிக்கையையும் முதலீடுகளாய் கொண்டு அவர்கள் முயன்று கொண்டிருகின்றார்கள்.
அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள், புலம்பெயர் உறவுகளின் உரிமைமிகு ஆதரவுக் கரங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவிகள் போன்றன, வாழத் துடிக்கும் ஈழத் தமிழினத்திற்கு ஆறுதலாய் – ஆதரவாய் இருக்கின்றன என்பது மறுப்பதற்கில்லை.
ஆனால், கிடைக்கின்ற உதவிகளும் ஆதரவும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரியமுறையில் பகிரப்படுகின்றனவா என்றால், சிறிது சிந்திக்கத்தான் வேண்டும்.
வடக்கு கிழக்கின் பல்வேறு கிராமங்கள் இன்னும் வெளியுலகுக்குத் தெரியாத வலிகளோடு உளன்று கொண்டிருக்கின்றன. நவீன உலகத்தோடு ஒப்பிடுகின்றபோது சுமார் 4 தசாப்தங்களுக்கு பின்தங்கிய வாழ்வை இம்மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
அவ்வாறான ஒரு பிரதேசம் தொடர்பாக ஆதவனின் இன்றைய அவதானம் (11.03.2019) கவனஞ்செலுத்துகின்றது.
யுத்தத்தின் கோரப் பிடிக்குள் சிக்குண்ட பிரதேசங்களில் அம்பாறை மாவட்டம் விதிவிலக்காக அமையவில்லை. உறவுகளை பறிகொடுத்து, வாழ்வதற்கு ஏதுமற்ற நிலையில் குடிசைகளில் இன்று தமது வாழ்க்கையை கழித்துக்கொண்டிருக்கின்றனர்.
இம்மக்களை, பிரித்தானியாவை சேர்ந்த சமூக சேவகரான டொக்டர் ஜயேந்திரன் நமசிவாயம் அண்மையில் நேரில் சென்று, அவர்களின் நிலையை கேட்டறிந்தார்.
இவ்வாறு எத்தனையோ கிராமங்கள் வெளியாரின் பார்வையில் இருந்து மறைந்து நிற்கின்றன. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். ஒரு பொதுவான நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் காரணமாக வாழ்வை தொலைத்தவர்கள் அனைவரும் மீட்டெடுக்கப்பட வேண்டியவர்களே. அனைத்து திட்டங்களும் பாதிக்கப்பட்ட அனைவரையும் மீட்டெடுக்கும் வகையில் திட்டமிட்ட பொறிமுறையூடாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்பதே அவதானத்தின் வேண்டுகோளாய் இருக்கின்றது.
சம்பந்தப்பட்டவர்கள் இதனை கவனத்தில் கொள்வார்களாக…!