நாளை வரை ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்
In இலங்கை April 24, 2019 11:45 am GMT 0 Comments 2276 by : Jeyachandran Vithushan

நாட்டில் இடம்பெற்ற தொடர் தாக்குதல்களை தொடர்ந்து இன்றும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என நாடாளுமன்றில் சபாநாயகர் அறிவித்துள்ளார்.
அந்தவகையில் இன்று இரவு 10 மணியில் இருந்து நாளை அதிகாலை 4 மணி வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து, அன்றைய தினம் பிற்பகல் 3.30 மணியளவில் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அடுத்த நாள் (23) காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 8.00 மணி முதல், நேற்று அதிகாலை 4.00 மணி வரை மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
இதனை அடுத்து நேற்றும் இரவு 9.00 மணி முதல், இன்று அதிகாலை 4.00 மணி வரை மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்பாக விளக்கம்
“பொலிஸ் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து அரசாங்க ஊழியர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் முப்படை வீரர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கின்ற காலப்பகுதியில், வீதியில், புகையிரத பாதையில், பூங்காக்கள், பொழுதுபோக்கு மைதானங்கள் அல்லது ஏதேனும் ஒரு பொது இடத்தில் இருத்தல் அல்லது அதன் ஊடாக பயணித்தல் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவ்வாறான இடங்களை பயன்படுத்துதல் அல்லது அதில் இருத்தல் அல்லது அதனூடாக பயணித்தல் போன்ற விடயங்களை மேற்கொள்வது தொடர்பில் அவசர தேவை ஏற்படும் நிலையில், ஏதேனும் ஒரு பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் தமது தேவையை தெரிவித்து கோரிக்கை விடுக்கும் நிலையில், குறித்த காரணத்தை பொலிஸ் பொறுப்பதிகாரி ஏற்றுக்கொள்ளும் நிலையில், அதற்கான அனுமதி பத்திரத்தை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தை நோக்கி செல்லும் நபர்கள் தங்களது விமான சீட்டை பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.”
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.