நினைவேந்தல் நடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அருட்தந்தை பிணையில் விடுதலை
In இலங்கை November 28, 2020 10:00 am GMT 0 Comments 1406 by : Yuganthini
மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த முற்பட்ட புனித மருத்தினார் குருபீடத்தின் முதல்வரான அருட்தந்தை, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றினால் பிணையில் இன்று (சனிக்கிழமை) விடுவிக்கப்பட்டார்.
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக இளவாலையைச் சேர்ந்தவரும் புனித மருத்தினார் குருபீடத்தின் முதல்வருமான அருட்தந்தை பாஸ்கரன், ஆயர் இல்லத்துக்கு அருகில் உள்ள புனித மருத்தினார் குருபீடத்துக்கு முன்பாக நேற்று மாலை 5.50 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம் புனித மருத்தினார் குருபீடத்துக்குள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிராபகரனின் ஒளிப்படங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னங்களை உள்ளடக்கி அலங்கரித்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகிய நிலையில் நீதிமன்றத் தடை உத்தரவை மீறி, நினைவேந்தலை நடத்த முயன்றமை உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுகளை முன்வைத்து, இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
அருட்தந்தை சார்பில் சட்டத்தரணி முன்னிலையாகி, சந்தேகநபர் சார்பில் பிணை விண்ணப்பத்தை முன்வைத்து சமர்ப்பணம் செய்தார்.
அதன்போது பிணைக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த பொலிஸார், சந்தேகநபருக்கு வெளிநாடுகளிலிருந்து நிதிப் பங்களிப்பு கிடைப்பது தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் மன்றுரைத்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதவான், அருட்தந்தையை ஒரு இலட்சம் ரூபாய் ஆள் பிணையில் விடுவிக்க உத்தரவு இட்டதுடன்,வழக்கு விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் வரை ஒத்திவைத்தார்
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.