நிறுத்தி வைக்கப்பட்ட காரில் வெடிகுண்டு?- யாழில் பரபரப்பு
In இலங்கை April 23, 2019 10:27 am GMT 0 Comments 2702 by : Yuganthini

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரில் வெடிகுண்டு இருக்கலாமென சந்தேகிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக, வாடகை கார் தரித்து நிற்கும் பகுதியில் இன்று காலை 6.30 மணி முதல் காலை 10 மணி வரையில் காரென்று தரித்து நின்றுள்ளது.
இதன்போது வாடகை கார் உரிமையாளர்கள், அந்த காரின் மீது சந்தேகம் கொண்டு காரின் கண்ணாடி வழியாக காரினுள் பார்த்தபோது, காரினுள் சில பொதிகள் காணப்பட்டன. அதனால் யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்தனர்.
அதனை தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து காரினை பார்வையிட்டதுடன் குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினருக்கும் அறிவித்தனர்.
அத்துடன் வைத்தியசாலை வீதியின் ஊடான போக்குவரத்தையும் தடை செய்து, வாகனங்களை வேறு வீதிகளின் ஊடாக அனுப்பி வைத்தனர். அதனால் அவ்விடத்தில் ஒருவித பதட்டம் ஏற்பட்டது.
இந்நிலையில் குறித்த காரின் உரிமையாளர், வைத்தியசாலைக்குள் இருந்து வெளியே வந்து, அது தன்னுடைய காரென உறுதிப்படுத்தியதுடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது உறவினருக்கு உதவியாக வைத்தியசாலையில் காலை முதல் தங்கி நிற்பதாகவும் ஆகையாலேயே காரினை தரித்து விட்டு சென்றதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை அவ்விடத்திற்கு வந்த பொலிஸ் விசேட அதிரடி படையினரின் குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினர், காரினை முற்றாக சோதனையிட்டு சந்தேகத்திற்குரிய பொருட்கள் காரினுள் இல்லை என்பதனை உறுதிப்படுத்திய பின்னர் அங்கிருந்து கலைத்து சென்றனர்.
அதனைத் தொடர்ந்தே வைத்தியசாலை வீதியின் ஊடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.
குறித்த சம்பவத்தால் யாழ்.நகர் மத்தியில் அச்சமான சூழ்நிலை காணப்பட்ட போதிலும், வெடி குண்டு இல்லை என்றதும் இயல்வு நிலைக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.