நிலவில் தேசியக் கொடியை நாட்டிய இரண்டாவது நாடானது சீனா!

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக நிலவில் தங்கள் தேசியக் கொடியை நாட்டிய இரண்டாவது நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது.
சேஞ்ச்-5 என்கிற ஆளில்லா விண்கலத்தை லாங் மார்ச்-5 என்ற ரொக்கெற் மூலம் கடந்த 24ஆம் தினதி சீனா விண்ணில் செலுத்தியது.
இந்நிலையில், சேஞ்ச்-5 விண்கலம் டிசம்பர் நான்காம் திகதியான நேற்று நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.
அதன்பின்னர், விண்கலத்தில் இருந்து வெளியேவந்த ரோவர் இயந்திரம் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக இயங்கத் தொடங்கியதுடன் முதல் நடவடிக்கையாக ரோவரில் சீன விண்வெளி விஞ்ஞானிகளால் அமைக்கப்பட்டிருந்த சீன தேசியக் கொடி நிலவின் மேற்பரப்பில் நாட்டப்பட்டது.
1969 ஆம் ஆண்டு நீல் ஆம்ஸ்ட்ரோங் உட்பட அமெரிக்க விண்வெளி வீரர்கள் அப்பல்லோ விண்கலம் மூலம் நிலவுக்குப் பயணம் மேற்கொண்டு 1969 ஜூலை 20ஆம் திகதி நிலவில் தரையிறங்கி அமெரிக்க தேசியக் கொடியை நாட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக நிலவில் ஆராய்ச்சி செய்வதில் கடந்த சில ஆண்டுகளாக சீனா தீவிரம் காட்டி வருகிறது.
அந்தவகையில் 1976ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக நிலவிலிருந்து பாறைத் துகள்களை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்வதற்குச் சீனா திட்டமிட்டுள்ளது.
இதன்படி, நிலவில் பாறைத் துகள்களை எடுத்துக்கொண்டு சேஞ்ச்-5 விண்கலம் இம்மாத இறுதிக்குள் பூமிக்குத் திரும்பவுள்ளது.
சீனாவின் இந்தத் திட்டம் வெற்றிகரமாக அமைந்தால் அமெரிக்கா, ரஷ்யாவிற்குப் பின்னர் நிலவிலுள்ள பாறைகளை ஆராய்ச்சிக்காக பூமிக்கு கொண்டுவரும் மூன்றாவது நாடு என்ற பெருமையை சீனா பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.