நீங்காத நினைவுகளையும் நெருங்க முடியாத சாதனைகளையும் விட்டுச் சென்ற கோப் ப்ரையண்ட்!
In விளையாட்டு January 29, 2020 5:11 am GMT 0 Comments 2010 by : Anojkiyan
விளையாட்டு இரசிகர்கள் மத்தியில் மகத்தான சாதனைகளையும், எண்ணி மகிழக் கூடிய நினைவுகளையும் விட்டுச் சென்ற, கூடை பந்து விளையாட்டு உலகில் ‘மாம்பா’ என புகழப்படும் ஜாம்பவான் கோப் ப்ரையண்ட் குறித்த விஷேட தொகுப்புக்குள் உங்களை அழைத்துச் செல்கின்றோம்….
1978ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 23ஆம் திகதி, பிலடெல்பியாவில் பிறந்தவர் கோப் பீன் ப்ரையண்ட் (Kobe Bean Bryant)
அமெரிக்காவின் தேசிய கூடைப்பந்து கூட்டமைப்பின் முன்னாள் வீரர் ஜோ ப்ரையண்ட்டின் கடைசி மகனான கோப் ப்ரையண்ட், தனது சிறுவயது முதலே கூடைப்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்தார்.
தனது மூன்று வயது முதல் கூடைப்பந்தில் நாட்டம் கொண்டிருந்த ப்ரையண்ட், தனது பாடசாலைக் காலத்தில் கூடைப்பந்தில் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். அவை சிறிது காலத்திலேயே தேசிய அளவில் கவனமும் பெற்றன.
இளம் வயதிலேயே பல்வேறு விருதுகளையும் குவித்த ப்ரையண்ட், பாடசாலைக் கல்வி முடியும் தருணத்தில் கூடைப்பந்தில் அவரது மொத்த புள்ளிகள் 2883 ஆக இருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இது அப்போதைய பிரபல கூடைப்பந்து வீரர்களான வில்ட் சேம்பர்லேன், லியோனல் சிமோன்ஸ் ஆகியோரை விட அதிகமாக இருந்ததே அதற்கு காரணம்.
இதன்பிறகு உலகளவில் கவனத்தை ஈர்த்த ப்ரையண்ட்டை கௌரவிக்கும் வகையில், நாட்டிலேயே சிறந்த இளம் கூடைப்பந்து வீரர் என்ற மகுடம் சூடப்பட்டது.
இந்த சாதனைகள், அங்கீகாரம் மற்றும் பெருமைகள் ப்ரையண்ட்டை நேரடியாக தேசிய கூடைப்பந்து கூட்டமைப்பின் உள்ளே நுழைய உதவி செய்தன.
தேசிய கூடைப்பந்து கூட்டமைப்பில் நுழைந்த ஒருசில நாட்களிலேயே ‘லேக்கர்ஸ்’ கூடைப்பந்து அணியிடமிருந்து ப்ரையண்டுக்கு அழைப்பு வந்தது. அதனை ஏற்ற அவர், லொஸ் ஏஞ்சல்ஸ் ‘லேக்கர்ஸ்’ அணிக்காக 20 ஆண்டு காலங்கள் தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கப் போகின்றேன் என்பதை அன்று அறிந்திருக்கவில்லை. இதனை அவரே பல செவ்விகள் வழியாக கூறியிருந்தமை நமக்கு நினைவிருக்கலாம்.
யாரும் நினைத்திருக்காத இரண்டு தசாப்த காலங்களாக ‘லேக்கர்ஸ்’ அணிக்காக விளையாடிய ப்ரையண்ட், 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது கடைசி போட்டியில் 60 புள்ளிகள் எடுத்த கையோடு தனது ஓய்வை அறிவித்தார்.
ஆனால், இவர் ஓய்வு பெற்ற பிறகும், இரசிகர்கள் இவரை கொண்டாடுவதற்கு அவரின் விளையாட்டு ஸ்டைலும், அவர் முத்திரை பதித்த சாதனைகளுமே சாட்சி என்றால் அது மிகையாகாது.
அந்த சாதனைகளில் சில துளிகள் இதோ…
இதுவரை 2000ஆம், 2001ஆம், 2002ஆம், 2009ஆம், 2010ஆம் ஆகிய ஆண்டுகளுக்கான ஐந்து, என்.பி.ஏ. (NBA) சம்பியன்ஷிப்களை ப்ரையண்ட் வென்றுள்ளார்.
2008ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலும் 2012ஆம் லண்டன் ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்று தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.
2006ஆம் ஆண்டு நடந்த ரொறன்ரோ அணியுடன் ஒரு போட்டியில் 81 புள்ளிகள் எடுத்து சாதனை புரிந்தார். என்.பி.ஏ. வரலாற்றில் ஒரே போட்டியில் இரண்டாவது அதிக புள்ளிகளை எடுத்த வீரர் ப்ரையண்ட் ஆவார். இந்த பட்டியலில் முன்னாள் அமெரிக்க வீரர் வில்ட் சேம்பர்லேன் (Wilt Chamberlain) 100 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
இதுதவிர ப்ரையண்ட், 18 முறை என்.பி.ஏ. (NBA) ஒல் ஸ்டார் சம்பியன்ஷிப்களை வென்றுள்ளார்.
குறிப்பாக, ப்ரையண்ட் எழுதிய ஒரு கவிதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘டியர் பாஸ்கெட்பால்’ என்ற திரைப்படம் சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான ஒஸ்கர் விருதை வென்றது.
இவ்வாறு பல சாதனைகளை பதிவு செய்து விளையாட்டு உலகில் நன்மதிப்பை கொண்டிருந்த, 41 வயதான கோப் ப்ரையண்ட்டுக்கு வனெஸ்ஸா என்ற மனைவியும், ஜியானா, பியான்கா, நடாலியா, காப்ரி என்ற நான்கு மகள்களும் உள்ளனர்.
இவ்வாறு உலகம் மெச்சும் அளவுக்கு திறமைகள் நிறைந்த புகழ் பூத்த ஜாம்பவான் கோப் ப்ரையன்ட், கடந்த 26ஆம் ஆம் திகதி, ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
தனது 13 வயது மகள் ஜியானா, மற்றும் பேஸ்போல் பயிற்சியாளர் ஜோன் அல்டோபெல்லி, உள்ளிட்ட 8 பேருடன் கோப் ப்ரையண்ட் ஒரு தனியார் சிக்ரோஸ்கி எஸ் 76 ரக ஹெலிகொப்டரில் தவுசன்ட் ஒக்ஸ் என்ற இடம் நோக்கி சென்றுகொண்டிருந்தார்.
இந்த வேளையில், உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில் கடும் பனிமூட்டம் காரணமாக அடர்ந்த மரங்கள் சூழ்ந்த மலைப்பகுதியின் அருகே சிக்கிக் கொண்ட ஹெலிகாப்டர் சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
பின்னர் தள்ளாட்டம் கண்ட ஹெலிகொப்டர், லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திலிருந்து வடமேற்கே 30 மைல் தொலைவில் உள்ள கலபாசாஸ் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகொப்டரில் பயணித்த அனைவரும் உடல் கருகி உயிரிழந்தனர்.
20 ஆண்டுகள் கூடைப்பந்து உலகை கட்டிப்போட்டிருந்த ஓர் ஆளுமையின் இந்த திடீர் இழப்பு, உலகம் முழுவதுமுள்ள கூடைப்பந்து இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது வரை அந்த சோகத்தில் இருந்து மீளாத அனைத்துலக விளையாட்டு பிரபலங்கள், நாட்டு தலைவர்கள் இரசிகர்கள் என அனைவரும் சமூகவலைதளங்களின் ஊடாக இரங்கல் வெளியிட்டு வருகின்றனர்.
கூடைப்பந்து துறையில் மகத்தான வீரராக பார்க்கப்படும் கோப் ப்ரையண்ட், இன்றும் பல இரசிகர்களுக்கும் இளம் வீரர்களுக்கும் முன்மாதிரியாக திகழ்வதென்பதே அவர், உலகத்துக்கு விட்டுச் சென்ற அடையாளமாகும்.
தலைமுறையின் நாயகன் கோப் ப்ரையண்ட்டின் ஆத்மா சாந்தியடைய நாமும் பிரார்த்திப்போம்….
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.