நீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஜனநாயகம் வென்றுள்ளது – நாராயணசாமி

நீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஜனநாயகம் வென்றுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில அரசின் அன்றாட நடவடிக்கைகளை பரிசீலிக்கும் வகையில் துணைநிலை ஆளுநருக்கு கடந்த 2017-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்திருந்த சிறப்பு அதிகாரங்களை இரத்து செய்ய வேண்டும் என முதல்வரின் நாடாளுமன்ற செயலரான லட்சுமி நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதி மகாதேவன் இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பளித்தார்.
அதில், முதல்வரின் அதிகாரத்திலும், அரசின் அன்றாட அலுவல்களிலும் தலையிடவும், கோப்புகளை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவிடவும் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.
மேலும், புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் நடவடிக்கைகளில் தலையிடும் வகையில் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்ற மத்திய அரசின் அறிவிப்பு இரத்து செய்யப்படுகிறது என்றும் உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள முதல்வர் நாராயணசாமி, ‘உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஜனநாயகமும், நீதியும் வென்றுள்ளது.
துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனக்கு அதிகாரம் இருப்பதாக கூறி செயல்பட்டதால் கடந்த மூன்று ஆண்டாக புதுச்சேரியில் மக்கள் நலத் திட்டங்கள் முடங்கி கிடக்கின்றது. மாநில வளர்ச்சி தடைப்பட்டுள்ளது.
துணைநிலை ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது. அவர் அமைச்சரவையின் முடிவை ஏற்றே செயல்பட வேண்டும். புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் அமைச்சரவையின் முடிவுதான் இறுதியானது என்பது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கிரண்பேடி உயர் நீதிமன்ற தீர்ப்பை மீறினால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன். ஆளுநர் தன்னை திருத்தி கொள்ள வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.