உயிரிழந்த மாணவனின் சடலம் கண்டெடுப்பு – (2 ஆம் இணைப்பு)
மஸ்கெலியா ஹப்புகஸ்தென்ன பிரதேசத்தில் கெனியன் நீர்த்தேக்கத்தில் தவறி வீழுந்து உயிரிழந்த மாணவனின் சடலம் இன்று (புதன்கிழமை) கண்டெடுக்கப்பட்டது.
கடற்படை சுழியோடிகளால் மீட்கப்பட்ட மாணவனின் சடலம் ஹட்டன் நீதவானின் மரண விசாரணையின் பின் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி சட்ட மருத்துவ அதிகாரிக்கு பணிமனைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நீர்த்தேக்கத்தில் தவறிவிழுந்த மாணவன் உயிரிழப்பு! (முதலாம் இணைப்பு)
மஸ்கெலியா ஹப்புகஸ்தென்ன பிரதேசத்தில் காணப்படும் கெனியன் மின்சார சபைக்கு நீர் வழங்கும் நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்து மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) இச்சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் மாணவனின் சடலத்தை மீட்க சுழியோடிகள் கொழும்பிலிருந்து இன்று வருகைதரவுள்ளனர்.
சீட்டன் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் விஜயகுமார் கலைராமன் (வயது – 14) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தார்.
ஹப்புகஸ்தென்ன பகுதியில் தந்தையுடன் விறகு தேடுவதற்காக கெனியன் நீர்த்தேக்க பகுதியில் உள்ள வனப்பகுதிக்குச் சென்ற குறித்த மாணவன் நீர்த்தேக்க அருவிப் பகுதியில் கற்பாறை ஒன்றில் ஏறும்போது தவறி நீர்த்தேக்கத்தில் வீழ்ந்துள்ளார்.
அதேவேளை மகனைக் காப்பாற்றுவதற்காக தந்தையும் நீர்த்தேக்கத்தில் குதித்துள்ளார். இருவரும் உயிருக்கு போராடிய நிலையில் தந்தையின் கூச்சலைக் கேட்டு அவ்விடத்திற்கு விரைந்த மூவர் தந்தையை காப்பாற்றியுள்ளனர். எனினும் மகனைக் காப்பாற்ற முடியாமல் அவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.