நுவரெலியாவில் கஞ்சாச் செடி தோட்டம் சுற்றிவளைப்பு- சந்தேக நபர் தப்பித்தார்!
நுவரெலியா மாவட்டத்திலுள்ள நானுஓயா எடின்புரோ தோட்டத்திற்கு மேற்பகுதியில் உள்ள அரசாங்க வனப்பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்ட சேனையொன்றை நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த தேடுதல் நடவடிக்கை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்றதுடன், குறித்த கஞ்சா சேனையில் மூன்று முதல் ஐந்து அடி உயரமான 272 கஞ்சா செடிகள் இருந்ததாகவும், சுற்றிவளைப்பின் போது கஞ்சா செய்கையில் ஈடுபட்டவர் தப்பியோடியுள்ளார் என்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், நுவரெலியா நீதிமன்றத்தில் காண்பிப்பதற்காக மூன்று செடிகளை மட்டும் வைத்துக்கொண்டு ஏனைய கஞ்சா செடிகளை விசேட அதிரடிப்படையினர் தீயிட்டு அழித்துள்ளனர்.
அத்துடன், இதன் பின்னணியில் உள்ளவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கையையும் விசேட அதிரடிப்படையினர் ஆரம்பித்துள்ளனர்.
இதற்கு முன்னரும் நுவரெலியாவில் கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் கைதாகியிருந்தாலும், வனப்பகுதியில் பாரியளவில் கஞ்சா செய்கை செய்யப்பட்ட தோட்டமொன்று சுற்றிவளைக்கப்பட்டமை இதுவே முதல் சந்தர்ப்பமாகக் கருதப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.