நேற்றைய தினம் பதிவான கொரோனா மரணங்கள் குறித்த முழுமையான விபரம்
In இலங்கை December 31, 2020 3:05 am GMT 0 Comments 1490 by : Dhackshala

நாட்டில் மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், நேற்றைய தினம் பதிவான கொரோனா மரணங்கள் குறித்த முழுமையான விபரங்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் மூளைக் காய்ச்சல் காரணமாக டிசம்பர் 30 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
அதேபோல, கொழும்பு – 10 பகுதியைச் சேர்ந்த 70 வயதான பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டு ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கல்லீரல் நோய் மற்றும் கொரோனா தொற்றால் இரத்தம் விஷமானதால் டிசம்பர் 29ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
அதேநேரம், கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த 50 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டு, ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்று, கடுமையான சிறுநீரக நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்பட்ட மாரடைப்பால் டிசம்பர் 29ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
அதேவேளை, கொழும்பு – 15 பகுதியைச் சேர்ந்த 66 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் நீரிழிவு நோயால் டிசம்பர் 29ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 199 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.