பங்களாதேஷிடம் இருந்து கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ள மைக் பொம்பியோ!

பங்களாதேஷில் அல்-குவைதா பயங்கரவாதக் அமைப்பு இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மைக் பொம்பியோ வெளியிட்ட அறிக்கைக்கு பங்களாதேஷ் அரசாங்கம் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
ஒரு மூத்த தலைவரின் இத்தகைய பொறுப்பற்ற கருத்துக்கள் மிகவும் துரதிர்ஷ்டவசமானவை, ஏற்றுக்கொள்ள முடியாதவை என பங்களாதேஷ் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இவ்வாறான ஆதாரமற்ற கருத்துக்களையும் பொய்யையும் பங்களாதேஷ் கடுமையாக நிராகரிக்கிறது என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் நேற்று (புதன்கிழமை) இரவு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் எங்களது சாதனை உலகளாவிய பாராட்டைப் பெற்றுள்ளது. பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டுக்கு ஏற்ப, நாங்கள் பதினான்கு சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு மாநாடுகளில் ஒரு அங்கத்தவராகிவிட்டோம். பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான சர்வதேச தடுப்பு முயற்சிகளுடன் இணைந்து தீவிரமாக செயற்படுகிறோம்” என பங்களாதேஷ் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறையின் இணையதளத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் மைக் பொம்பியோ சில நாடுகளை பயங்கரவாத மையங்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதில், ஈரானை அல்-குவைதாவின் புதிய வீட்டுத் தளம் என தெரிவித்திருந்த நிலையில், இதங்கு ஈரான் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தது.
அத்துடன், லிபியா, யேமன் மற்றும் மாக்ரெப் போன்ற நாடுகளிலும் அல்-குவைதாவின் ஆதிக்கம் இருப்பதாக பொம்பியோ தெரிவித்திருந்தார்.
இந்த வரிசையில், பங்களாதேஷிலும் அல்-குவைதா இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்த நிலையில் பங்களாதேஷ் தரப்பிலிருந்து கடுமையான கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.