படையினரின் சீருடை, அங்கிகளை வைத்திருந்த முன்னாள் ஊர்காவல் வீரர் கைது!
படையினரின் சீருடை மற்றும் அங்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் ஊர்காவற்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை பாலையூற்று பகுதியில் வைத்து பொலிஸாரால் இன்று (வெள்ளிக்கிழமை) இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகளைத் தொடர்ந்து இராணுவமும் பொலிஸாரும் இணைந்து பாலையூற்று பிரதேசத்தில் உள்ள வீடுகளை சுற்றிவளைத்து சோதனையிடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த 8 சீருடைகள், காலணி, துப்பாக்கி ரவை கூடுகள் தாங்கும் அங்கி, 2 தொப்பிகள் மற்றும் சின்னங்கள் என்பன கண்டெடுக்கப்பட்டன.
இதன்போது, வீட்டு உரிமையாளரான அப்துல் முபாரக் முகமது பர்ஹான் என்பவரை விசாரணை செய்தபோது, தான் முன்னர் ஊர்காவல் படையில் இருந்ததாகவும் யுத்தம் நிறைவடைந்த நிலையில் வெளிநாடு சென்றதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், 3 வருடங்கள் சவுதி அரேபிரியாவிலும், ஒரு வருடம் கட்டார் நாட்டிலும் தொழில் செய்துவிட்டு நாடு திரும்பியுள்ளதாகவும் அவர் பொலிஸாரிடம் குறிப்பிட்டார்.
இதையடுத்து, அவரைக் கைதுசெய்த திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.