பட்டதாரிகளுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம்- வியாழேந்திரன்
In இலங்கை January 4, 2021 3:08 am GMT 0 Comments 1593 by : Yuganthini
தேர்தல் காலத்தில் பட்டதாரிகளுக்கு வழங்கிய வாக்குறுதியை தற்போது நாம் நிறைவேற்றியுள்ளோம் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் எஸ்.வியாழேந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சில வாக்குறுதிகளை வழங்கியிருந்தார்.
அதில் ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவதாகும். அந்த வாக்குறுதிக்கு அமைவாக 34ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டு முடிந்துள்ளது. இரண்டாம் கட்டத்திற்கான நேர்முகத்தேர்வு நடந்துகொண்டிருக்கின்றது. விரைவாக ஒரு இலட்சம் நியமனங்களும் வழங்கி முடிக்கப்படும்.
முன்னைய அரசாங்கத்தினை நாங்கள் பாதுகாத்தோம்.தமிழ் தலைவர்கள் அவர்களுக்கு ஆதரவாக வாக்களித்து அவர்களுடன் நடனமாடினார்கள்.
ஆனால் இந்த காந்திபூங்கா முன்பாக இரவு பகலாக மழையிலும் குளிரிலும் 188நாட்கள் பட்டதாரிகள் போராடியபோது அவர்களில் 20சதவீதமானவர்களுக்கும் நியமனம் வழங்கப்படவில்லை. ஆனால் இந்த ஜனாதிபதி, ஐம்பதாயிரம் பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்குவேன் என்று கூறியிருந்தார்.
இது சத்தியமா, பொய் பேசுகின்றார்கள் 50ஆயிரம் பேருக்கு ஒரே தரத்தில் நியமனம் வழங்கப்படுமா என்றார்கள். தற்போதுள்ள பிரதமர் முன்னர் ஜனாதிபதியாக இருந்தபோது ஒரே நாளில் 57ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கினார்.
அதேபான்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ கூறியதற்கு அமைவாக ஐம்பதாயிரம் பட்டதாரிகளுக்கு அல்ல அறுபதாயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஐந்தாயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.