பண்டிகை காலத்தில் அநாவசியமான நடமாட்டங்களை தவிர்க்கவும் – யாழ். அரசாங்க அதிபர்
In ஆசிரியர் தெரிவு December 23, 2020 7:42 am GMT 0 Comments 1507 by : Dhackshala
பண்டிகை காலத்தில் பொதுமக்கள் அநாவசியமான நடமாட்டங்களை தவிர்த்து சுகாதார பிரிவினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்
யாழ். மாவட்டத்தில் தற்போதுள்ள கொரோனா நிலைமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தற்போது யாழில் கொரோனா தொற்று பரவுகின்ற வீதம் சற்று குறைவடைந்து வருகிறது.
சுகாதார அதிகாரிகளின் சேவை காரணமாகவும் பொதுமக்களுடைய ஒத்துழைப்பினாலும் யாழ். மாவட்டத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அபாய நிலை இன்னும் நீங்கிவிடவில்லை
ஆகவே இது ஒரு பண்டிகை காலமாக இருக்கின்ற காரணத்தினால் சைவ ஆலயங்களிலும் விரத பூசைகள் இடம்பெற்று வருகின்றன.
நத்தார் தினம் மற்றும் புதுவருட கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன. பொதுமக்கள் தங்களுடைய அன்றாட நடவடிக்கைகளை மிகவும் கவனமாகச் செயற்படுத்த வேண்டும்.
அநாவசியமாக கடைகளுக்கு செல்லுதல், அல்லது குழந்தைகளை அழைத்துக்கொண்டு கடைக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளல் வேண்டும். அநாவசியமான ஒன்றுகூடல்களைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
சுகாதார பிரிவினுடைய அறிவுறுத்தல்களையும் வழிகாட்டல்களையும் பின்பற்றி முகக்கவசம் அணிந்து, அதேபோல தொற்று நீக்கி திரவங்களை பாவித்து தங்களுடைய கடமைகளை புரிதல் அவசியம்.
இதேநேரம், அநாவசியமான நடமாட்டங்களை தவிர்த்தல் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். மேலும் இந்த காலம் மிக அபாயமான காலமாக இருக்கின்றமையினால் அனைவருடைய ஒத்துழைப்பும் இந்த விடயத்திற்கு தேவை” என மேலும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.