யாழில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம் தணியவில்லை – இன்றும் ஒருவர் உயிரிழப்பு!
In இலங்கை April 30, 2019 2:11 pm GMT 0 Comments 3609 by : Jeyachandran Vithushan
தென்மராட்சி – பாலாவிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் இரும்புக் கம்பித் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலாவிப் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணியளவில் சுமார் முப்பது பேர் அடங்கிய கும்பல் ஒன்று வாள்கள், ஈட்டிகள் மற்றும் கூரிய ஆயுதங்களால் வீதியில் நின்றவர்கள், வீட்டில் இருந்தவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் பாலாவியைச் சேர்ந்த 62 வயதான தம்பிராஜா பொன்னுத்துரை என்பவருடைய மார்பில் ஆயுதக் கும்பல் ஈட்டியால் குத்தியதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் வீதியால் சென்ற பாலாவியைச் சேர்ந்த 25 வயதான யே.திலிசாந், பாலாவி வடக்கைச் சேர்ந்த 39 வயதான சோ.கணேசமூர்த்தி, 46 வயதான தம்பிராஜா யோகராஜா, 38 வயதான த.கவிதரன், 52 வயதான நடராஜா வளர்மதி, 35 வயதான செல்வராஜா குமார் மற்றும் 39 வயதான வைரமுத்து தவசீலன் ஆகியோர் வாள்வெட்டு மற்றும் கல்வீச்சுத் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படுகாயமடைந்தவர்களில் 3 பேர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலாவி மற்றும் கெற்பேலிப் பகுதிகளில் ஒரு வாரத்திற்குள் இது மூன்றாவது வாள்வெட்டுச் சம்பவமாகும்.
கடந்த திங்கட்கிழமை மாலையும் கெற்பேலியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்த வாள்வெட்டுக் கும்பல், வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்களை அடித்து நொருக்கி சேதமாக்கியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.