பந்து வீச தாமதம் : மேற்கிந்திய தீவுகள் அணிக்கு சர்வதேச கிரிக்கட் சம்மேளனம் அபராதம்!
In விளையாட்டு December 17, 2019 6:33 am GMT 0 Comments 1701 by : adminsrilanka
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் சென்னை சேப்பாக்கம் எம். ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீச தாமதமாகிய காரணத்தினால் அந்த அணிக்கு சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் அபராதம் விதித்துள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் என இரு தொடர்களில் பங்கேற்கின்றது.
இந்த கிரிக்கட் சுற்றுப்பயணத்தின் முதல் தொடரான டி20 சர்வதேச தொடரை இந்திய அணி 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றிய நிலையில் அடுத்த தொடரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரின் முதல் போட்டி நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 13 பந்துகள் மீதமிருக்க 8 விக்கெட்டுக்களினால் அபார வெற்றி பெற்றது.
போட்டியில் நாயண சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இதன் போது மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சில் சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய விதிமுறையை மீறியதன் விளைவாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் சர்வதேச போட்டி என்ற அடிப்படையில் 50 ஓவர்களையும் வீசுவதற்கு ஒரு அணிக்கு குறிப்பிட்டளவு நேரம் வழங்கப்பட்டிருக்கின்றது.
அவ்வாறு வழங்கப்பட்டுள்ள நேரத்திற்குள் நேற்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியினால் நான்கு ஓவர்கள் குறைவாக வீசப்பட்டிருந்தது.
சர்வதேச கிரிக்கட் பேரவையின் இலக்கம் 2.22 சரத்தில் குறிப்பிடும் அணித் தலைவர்கள், வீரர்களினுடைய நடத்தை மற்றும் அவர்கள் சார்ந்த கோட்பாடுகளை உள்ளடக்கும் சரத்தின்படி மேற்கிந்திய தீவுகள் அணியினருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இவ்வாறு குறைந்த பந்துவீச்சு பிரதி பதிவு செய்யப்படுமாயின் ஒரு ஓவருக்கு வீரரின் போட்டி ஊதியத்தில் 10 சதவீத அபராத தொகையும், குறித்த அணியின் தலைவருக்கு அதன் இரட்டிப்பு தொகையும் அபராதமாக விதிக்கப்பட்டு வந்தது.
ஆனால் தற்போதைய புதிய சட்டத்தின் பிரகாரம் அணித்தலைவர் என தனியாக இல்லாமல் ஒரு ஓவருக்கு போட்டியில் விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் 20 சதவீத அபராதம் விதிக்கப்படும்.
அதன் பிரகாரம் மேற்கிந்திய தீவுகள் அணி குறித்த நான்கு ஓவர்களையும் வீசுவதற்கு மேலதிக நேரம் எடுத்ததன் காரணமாக போட்டியில் விளையாடிய 11 வீரர்களுக்கும் ஒரு வீரருக்கு போட்டி ஊதியத்திலிருந்து 80 சதவீதம் அபராத தொகையாக விதிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டினை போட்டியின் களநடுவர்களான நித்தின் மேனன், ஷோன் ஜோர்ஜ், மூன்றாம் நடுவர் ரொட்னி டக்கர் மற்றும் நான்காம் நடுவர் அனில் சௌத்திரி ஆகியோர் உறுதிப்படுத்த, போட்டியின் மத்தியஸ்தரான டேவிட் பூண் மூலமாக ஐ.சி.சி இனால் அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
போட்டி முடிவடைந்ததன் பின்னர் மேற்கிந்திய தீவுகளின் அணித்தலைவவர் கிரண் பொல்லார்ட் குறித்த குற்றச்சாட்டினை ஒப்புக்கொண்டதன் காரணமாக மேலதிக விசாரணைகள் எதற்கும் அவர் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்பதையும் ஐ.சி.சி தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.